பக்கம்:மேனகா 2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

மேனகா

போலவே அன்றைக்கும் அவரது வேலைக்காரன் காயங்களைக் கட்டுவதற்குத் தேவையான கருவிகளோடு வந்து சேர்ந்தான். துரையைக் கண்ட கனகம்மாளது மனதில் சிறிது தைரியமுண்டாயிற்று; விரைவாக எழுந்து மரியாதையாக அவரை வரவேற்றாள். அவளும், கிட்டனும் பரிதாபகரமாக நின்ற தோற்றமே ஆயிரம் நாக்குகள் கொண்டு அவரைக் கெஞ்சி மன்றாடி தங்கம்மாளைக் காப்பாற்றும்படி வேண்டுவதுபோல இருந்தது. கல்நெஞ்ச முடைய கிராதகரும் கண்டு இரங்கத் தக்க நிலைமையில் காணப்பட்ட அவர்களை வில்லியம்ஸ் துரை மிகவும் அலட்சியமாகப் பார்த்து, “என்னம்மா! பிள்ளை வந்துவிட்டாரா?” என்று புன்சிரிப் போடு புரளியாகக் கேட்டார். கனகம்மாள் அதற்கு எவ்வாறு மறுமொழி சொல்வதென்பதை உணராமல் இரண்டொரு நிமிஷம் சாதித்தபின், “அவன் வந்திருந்தால், நாங்கள் உடனே உங்களிடம் ஓடி வந்திருக்க மாட்டோமா ? ஒரு நிமிஷம் தாமதிப்போமா ? அங்கே அவனுக்கு என்ன ஆபத்து நேர்ந்ததோ என்னவோ தெரியவில்லை. அவனைத் தேடிக் கொண்டு போன சேவகனும் வரவில்லை. நீங்கள் தான் எப்படியாகிலும் தயவு செய்யவேண்டும். பெண்ணின் உயிர் போய்விடும்போலிருக்கிறது. எங்கள் மேல் இரக்கங்கொண்டு செய்யுங்கள்” என்று மென்மேலும் கெஞ்சி மன்றாடினாள். அவளது சொற்களைச் செவிகளில் வாங்காதவரைப்போலத் தோன்றிய துரை தங்கம்மாளுக்கருகில் நெருங்கி அவளது நாடியை ஆராய்ந்து பார்த்தார்; புண்களை அலம்பிச் சுத்தி செய்து மருந்து வைத்துக் கட்டச் செய்தார்.

பிறகு துரை கனகம்மாளைப் பார்த்து, “இந்த அம்மாள் பேசினாளா?” என்றார். அவள், “இல்லை” என்றாள்.

டாக்டர்:- கண்ணைத் திறந்தாளா ?

கனகம்மாள்:- இல்லை; ஆனால் அப்போதைக் கப்போது முக்கி முனகினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/223&oldid=1252398" இலிருந்து மீள்விக்கப்பட்டது