பக்கம்:மேனகா 2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புண்ணாகச் செய்ததினி போதும் பராபரமே?

223


டாக்டர்:- சரி; நாமென்ன செய்யலாம். நீங்களோ அலட்சியமாக இருக்கிறீர்கள். தம்முடைய சம்சாரத்தின் ஆபத்தான நிலைமையை உணராமல் புருஷன் இப்படி இருப்பானா இது ஆச்சரியமாக இருக்கிறது! பணத்தைப் பற்றிக் கூடநான் கவனிக்கவில்லை. பெண்ணுக்குப் போஷக (Guardian)னான புருஷன் பத்திரம் எழுதிக்கொடுக்கு முன் நான் இந்த அபாயகரமான ஆபரேஷனைச் செய்யக் கூடாது. ஆகையால், தயவாகவாவது தருமத்திற்காவது நான் ஆபரேஷன் செய்வதும் பிசகு. இந்த மாதிரியான ஆபரேஷனுக்கு நான் ஐந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வாங்குவது வழக்கம். நீங்கள் சிபாரிசு கடிதம் கொண்டு வந்தபடியால், இருநூறு ரூபாய்க்கு ஒப்புக்கொண்டேன். அதுவும் ஒழுங்காக வராவிட்டால் நான் என்ன செய்கிறது? முதலிலேயே ஏழையென்று நீங்கள் சொல்லியிருந்தால், நான் பணம் கேட்டிருக்க மாட்டேன். நீங்கள் ஆசை காட்டி ஏமாற்றுகிறீர்களோ என்று இப்போது நினைக்க வேண்டி யிருக்கிறது. இப்படி அநேகர் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள்.

கனக:- ஐயா! அப்படி நினைப்பது சரியல்ல. நாங்கள் அற்ப மனிதரல்ல. இரண்டு நாளைக்கு முன் எங்கள் வீட்டிலிருந்து கொள்ளைக்காரர் இருபதினாயிரம் ரூபாய் கொண்டு போய்விட்டார்கள். இந்தப் பெண்ணின் உடம்பிலிருந்து மாத்திரம் ஐயாயிரம் ரூபாய் பெறும்படியான நகைகளைக் கொண்டு போய்விட்டார்கள். அந்த நகைகளை இவளுக்குப் போடாதிருந்தால் இந்த ஆபத்தே வந்திராது; நான் சொன்னதை பாலியர்கள் கேட்கவில்லை. இப்போது புடவை கூட இரவல் புடவை கட்டும்படி நேர்ந்தது. என் பிள்ளையின் டிப்டி கலெக்டர் உத்தியோகமும் கொள்ளை நடந்த தினத்திலேயே போய்விட்டது. நான்கு நாளைக்கு முன் இவளுடைய பெண் காணாமல் போய்விட்டாள். காணாமல் போன பெண்ணின் புருஷன் மோட்டார் வண்டியில் அகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/224&oldid=1451516" இலிருந்து மீள்விக்கப்பட்டது