பக்கம்:மேனகா 2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புண்ணாகச் செய்ததினி போதும் பராபரமே?

229

சொன்னது அவளது நினைவிற்கு வந்தது. தங்கம்மாளின் உயிர் சமீபகாலத்தில் போகப் போகிறதென்று நினைத்தாள் கண்ணிர் தாரை தாரையாக வழிந்தது; அவள் உடனே தனது மார்பில் அடித்துக் கொண்டாள். “ஐயோ! என் பாக்கியமே! நீயும் போகிறாயா? போ; போ; பாவிகளாகிய நாங்கள் கொடுத்து வைத்தது இவ்வளவு தான்; எல்லாம் போய்விட்டது; இனிமேல் என்ன இருக்கிறது; எல்லோரையும் தின்று விட்டு ஜாம்பவானைப்போல நான் மாத்திரம் ஆயிரங்காலம் இருக்கவேண்டுமா? நானும் கிணற்றில் விழுந்து உயிரைவிட்டு விடுகிறேன்; என் குடும்பம் அடியோடு பூண்டற்றுப் போகட்டும்” என்று பலவாறு பிரலாபித்தழுத சமயத்தில் தங்கம்மாள் வாயைத் திறந்து, “தாகமா யிருக்கிறது” என்றாள். அந்தக் குரல் கிணற்றிற்குள்ளிருந்து உண்டானதைப் போலத் தோன்றியது. அவள்தான் பேசினாளோ அல்லது வேறு எவளாகிலும் பேசினாளோ என்னும் சந்தேகம் உண்டாயிற்று. கனகம்மாள் வியப்பும் திகைப்பும் அடைந்தாள்: டாக்டர்துரை, சொன்னது நிஜமாயிற்றென்று நினைத்தாள்; தங்கம்மாளுக்கு மரணகாலம் வந்துவிட்டதென்று எண்ணினாள் என்றாலும் அவளுக்குத் தண்ணீராகிலும் கொடுத்து அவளது கடைசி ஆசையைப் பூர்த்தி செய்வோ மென்று நினைத்தாள்; ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அவளது வாயில் வைத்தாள். தங்கம்மாள் மிகுந்த ஆவலோடு சிறிதளவு தண்ணீர் பருகினாள். அடுத்த நொடியில், அவளது கண்கள் மூடிக்கொண்டன. அவள் அயர்ந்து பிணம்போலானாள். அதைக் கண்ட கனகம்மாள் கோவெனக் கதறியழத் தொடங்கி, “ஐயோ! தங்கமே கடைசித் தண்ணீர் குடித்து விட்டுப் போகிறாயோ! இனிமேல் கண்ணைத் திறக்க மாட்டாயோ! பாழாய்ப்போன அந்த எமன் உன்னைக் கொண்டுபோகத் துணிந்தானே!” என்று மேன்மேலும் பெருங்கூச்சலிட்டு ஒப்பாரி வைத்தழுதாள். அதைக் கண்ட கிட்டனும் வாய்விட்டுக் கதறத் தொடங்கினான். அந்த விபரீதக் கூக்குரலைக் கேட்டு வெளியிலிருந்த ஜனங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/230&oldid=1252406" இலிருந்து மீள்விக்கப்பட்டது