பக்கம்:மேனகா 2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புண்ணாகச் செய்ததினி போதும் பராபரமே?

231

“என்ன அம்மா மூச்சு வருகிறதே! அழுகிறீர்களே!” என்றாள். அதைக் கேட்ட யாவரும் வியப்படைந்து அருகில் நெருங்கிப் பார்த்தனர். கனகம்மாளும் உற்று நோக்கினாள். மூச்சு மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தது; உடனே கனகம்மாள் விரைவாகக் கிட்டனை அழைத்து இருநூற்றைம்பது ரூபாயை எடுத்துக்கொண்டு ஓடி டாக்டரிடம் கொடுத்து அவரை உடனே அழைத்துக் கொண்டு வரும்படி கூறவே, கிட்டன் அவ்வாறே பணத்தை எடுத்துக் கொண்டு வெளியிற் சென்று ஒரு குதிரை வண்டியில் ஏறிக்கொண்டு காற்றாகப் பறந்து மறைந்து போனான்.

அப்பொழுது தங்கம்மாளுக்கு மூச்சு வருவதும் நிற்பதுமாக இருந்தது. டாக்டர் உடனே வருவாரோ என்றும், அதுவரையில் உயிர் நிற்க வேண்டுமே என்றும் கனகம்மாளும் மற்ற ஜனங்களும் நினைத்துப் பேராவல் கொண்டு நெருப்பின் மேல் கிடக்கும் புழுவெனத்துடித்தனர். அவ்வாறு ஒரு நாழிகை நேரம் கழிந்தது. கிட்டன் ஒடி வந்தான். டாக்டரை எப்போது காண்போமென்று ஆவல் கொண்டிருந்த ஜனங்கள் யாவரும் அவர் வருகிறாரா என்று பார்த்தனர். அவர் காணப்படவில்லை. ஒருகால் அவர் பின்னால் வருவாரோ வென்று நினைத்து யாவரும் கிட்டனது முகத்தை நோக்கினார்கள். அவனது முகம் மிகுந்த சந்தோஷத்தைக் காண்பித்தது. என்றாலும், அந்த ஒரு நிமிஷத்தில் கனகம்மாளின் ஹிருதயம் படீரென்று வெடித்துப் போகும் நிலைமையிலிருந்தது. அவள் கிட்டனது முகத்தைப் பார்த்து, “எங்கே அவர்?” என்றாள். கிட்டன் சந்தோஷத்தோடு, “பாட்டீ! பயப்படாதே; அக்காள் பிழைத்துக் கொண்டாள்” என்றான். அதைக் கேட்ட கனகம்மாளுக்கு ஒன்றும் தெளிவாகத் தோன்றவில்லை. அவன் மூடத்தனமாக ஏதோ உளறுவதாக அவள் நினைத்தாள். டாக்டர் வரவில்லை யென்ற ஆத்திரம் ஒரு புறம் பொங்கி எழுந்தது. உடனே அவள், “என்னடா உளறுகிறாய்? டாக்டர் எங்கே?” என்று வினவினாள். கிட்டன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/232&oldid=1252408" இலிருந்து மீள்விக்கப்பட்டது