பக்கம்:மேனகா 2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேய்க் கூத்து

237

கொண்டனர். துரையும் அதற்கு இணங்கினார். பெருந்தேவி, கோமளம், சாமாவையர் ஆகிய மூவரும் பங்களாவில் குடி புகுந்த தினத்திற்கு நான்காம் நாளே, வராகசாமியை அழைத்து வரக் குறிக்கப்பட்ட தினம். அன்று பகலிலேதான் சாமாவை யருக்குப் பெருத்த விருந்து நடந்தது.

அன்று அம்மூவரும் விலாப்புடைக்கத் தின்றபின் சோபாக்களில் உல்லாசமாக உட்கார்ந்துகொண்டனர். மின்சார விசிறிகள் யாவும் சுழன்று ஜிலு ஜிலென்று குளிர்ந்த கடற் காற்றை இறைத்து தேவியம்மாள் சாமாவையரைப் பார்த்து “இவ்வளவு பெரிய பங்களா இருப்பதற்கு, ஒரு மோட்டார் வண்டி இல்லாமற் போனால், கெளரவப்படாது. அடே சாமா! போனால் போகிறது. சம்பந்தி ஐயங்கார் கொடுக்கப்போகிற பதினாயிரம் ரூபாயில், ஐயாயிரம் ரூபாயில் ஒரு மோட்டார் வண்டி வாங்கி விடுவோம். நீ இப்போதே நல்ல வண்டியாகப் பார்த்துப் பொறுக்கி வை. கலியாணத்தை முடித்துக் கொண்டு நாம் திருப்பதியிலிருந்து வந்தவுடன், மோட்டார் வண்டியும் வந்து சேரவேண்டும்; நாம் உலாவப்போன வேளைகள் தவிர மற்ற வேளைகளில் வராகசாமியும், பங்கஜவல்லியும் சவாரி போய் சுகப்படட்டும். அவளுடைய அப்பா கொடுக்கும் பணத்தால் வாங்கும் மோட்டார் வண்டியை அவள்தான் முதலில் அநுபவிக்க வேண்டும்” என்றாள்.

கோமளம்:- ஏனடி அக்கா! நாம் ஒரு காரியம் செய்வோமே? நாம் இரவில் வந்திறங்கின உடனே பெண்ணையும் பிள்ளை யையும் நம்முடைய மோட்டார் வண்டியிலேயே வைத்து சின்ன மேளம், பெரிய மேளம், பாண்டு வாத்தியம், வாண வேடிக்கை முதலியவைகளுடன், ஊர்வலமாக அழைத்து வந்தால், அது எவ்வளவு அழகாயிருக்கும்! அப்படிச் செய்வோமே?

பெருந்தேவி:- (சந்தோஷத்தோடு) ஆமாடா சாமா ! அப்படியே செய்துவிடுவோம். சம்பந்தி ஐயங்கார் நிச்சயதாம் பூலத்தின் போது பணத்தை இங்கேயே கொடுக்க மாட்டாரோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/238&oldid=1252414" இலிருந்து மீள்விக்கப்பட்டது