பக்கம்:மேனகா 2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

மேனகா

உபசரணை செய்வதே அவளுக்கு ஆனந்தமாக இருந்தது. தவிர, டாக்டர் துரைஸானி மேனகாவைப்பற்றிய விவரங்களை எப்படியோ அறிந்திருந்ததாக வராகசாமிக்குத் தோன்றியது ஆகையால், அந்தப் பெண்ணின் உதவியால் அந்த வரலாற்றைத் தான் கிரகிக்கலாமென்பதும் அவனது கருத்து; அவர்கள் பங்களாவுக்கு வந்து மூன்று நாட்களாயின. அந்த வடிவழகியின் விடாமுயற்சியால் அவனது புண்களும் அநேகமாக ஆறிப்போயிருந்தன. அவன் கட்டிலிலேயே எழுந்து உட்கார்ந்து ஒத்திகை பார்த்ததன்றி தரையில் காலை ஊன்றி நின்றும் பார்த்தான். முழங்காலில் இன்னமும் சிறிது நோவிருந்த தனால், அவன் படுக்கையை அதற்குள் விலக்கி விடக்கூடாம லிருந்தது; டாக்டர் துரையும், டாக்டர் துரைஸானியும் நாளுக்கொரு முறை அங்கு வந்து, அவனது நிலைமையை ஆராய்ந்து பார்த்து விட்டு, பணிமகளுக்குரிய உத்தரவுகளைச் செய்தும் போயினர்.

மூன்றாம் நாள் வராகசாமி ஆகாரம் உட்கொண்ட சமயத்தில், அந்தப் பணிப்பெண் தனது இருப்பிடத்திற்குப் போய்த் தனது போஜனத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்தாள். அவளது அழகிய முகம் வழக்கப்படி, அன்றலர்ந்த தாமரை மலரைப்போல இருந்தது. ஆனால், வராகசாமியின் நிலைமையில் ஒருவகையான மாறுபாடு உண்டாயிருந்தது. அவனது முகத்தில் பெருத்த விசனமும், கவலையும், ஆத்திரமும் காணப்பட்டன. அவனது தேகம் படபடத்துக் காணப்பட்டது. அந்தக்குறிகளை நுட்பமாக உணர்ந்து கொண்ட அந்தப் பெண்மணி அவன் மேனகாவைப்பற்றி நினைத்து வருந்து கிறான் என்று நினைத்துக் கொண்டு மெல்ல அருகில் நெருங்கி, அவனது நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, “நாளுக்கு நாள் உங்ளுடைய உடம்பு குணமடைவதைக்கண்டு சந்தோஷப்பட்டு வந்தேன். இன்று உடம்பு நிரம்பவும் படபடத்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/249&oldid=1252425" இலிருந்து மீள்விக்கப்பட்டது