பக்கம்:மேனகா 2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

251

யிருக்கிறதா? என்னுடைய மேனகாவைப்போல எனக்குப் பெண்டாட்டி வரப்போகிறது மில்லை; அவளால் நான் படும் பாட்டைப்போலவும் எவரும் அநுபவிக்கப்போறதுமில்லை; இந்த நிலைமையில் எந்த மூடன் கலியாணம் செய்து கொள்வான்? - என்றான்.

அதைக் கேட்ட பணிமகள் பலவகையான எண்ணங் களால் வதைபட்டவளாய் அவனை நோக்கிப் புன்முறுவல் செய்து, “காணாமல் போன மேனகா வின் விஷயத்தில் உங்களுக்கு இவ்வளவு இரக்கமும், தயையும், தருமநினைவும் இருப்பதைக்காண சந்தோஷத்தினால் என் மனம் உண்மையில் அப்படியே பொங்கி யெழுகிறது. பெண் பிள்ளைகள் விஷயமாக நீங்கள் முன்பு கொண்டிருந்த நினைவுக்கு மாறாக நீங்கள் இப்போது பேசுவதைக் காண நான் அடையும் ஆநந்தத்துக்கு அளவே இல்லை. நான் இத்தனை நாள் உழைத்தது வீணாக வில்லை. மேனகாவுக்குப் பதிலாக நான் உங்களுக்கு மனமார்ந்த நன்றியறிதல் செலுத்துகிறேன். அப்படித் தங்களுக்கு மணம் வேண்டாமென்று தோன்றுமாகில், தங்களுடைய கருத்தைச் சகோதரிமாரிடம் தெரிவித்து விடுகிறதுதானே; இதைப்பற்றி வருந்தி உடம்பை ஏன் கெடுத்துக் கொள்கிறீர்கள்?” என்று மிகவும் நயமாகவும், அந்தரங்கமான அபிமானத்தோடும், அவன் ஆயாசப்படா விதமாகவும் கூறினாள்.

வராக:- அப்படி நான் சொல்லிக் கலியாணத்தை எளிதில் தடுத்துவிடக் கூடுமானால், நான் இவ்வளவு தூரம் கவலை அடைவேனா? இவர்கள் இன்னும் சில காரியங்கள் செய்திருக் கிறார்கள். இவர்களே பெண்ணைப் பார்த்துக் கலியாணத்தை நிச்சயித்து தேதியையும் குறித்ததன்றி, பெண் வீட்டாரிடம் வரதட்சணை ரூபாய் பதினாயிரம் வாங்கி அதைக் கொண்டு இந்தப் பங்களாவை விலைக்கு வாங்கிவிட்டார் களாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/252&oldid=1252428" இலிருந்து மீள்விக்கப்பட்டது