பக்கம்:மேனகா 2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

263

பிடிக்கும் நோக்கத்துடன், நான் வீராச்சாமிநாயுடு கம்பெனிக்குப் போய் விசாரணை செய்தேன். மாயாண்டிப்பிள்ளை தஞ்சையிலிருந்து ஒரு பெண்ணை இரகசியமாக அழைத்துக் கொண்டு போனது உண்மைதான் என்பதும், அவனுக்கும் இதற்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்பதும் வெளியாயின. அந்த மாயாண்டிப்பிள்ளை வீராச்சாமிநாயுடு கம்பெனியின் வேலைக்கு வந்தபோது நாயுடுவுக்கு ஒர் ஒப்பந்தம் எழுதிக்கொடுத்திருக்கிறான். அந்த ஒப்பந்தம் மாயாண்டிப்பிள்ளையின் கையால் எழுதப்பட்டு ரிஜிஸ்டர் கச்சேரியில் பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தப் பத்திரத்தை வாங்கி அதிலுள்ள எழுத்துக்களையும், உங்கள் மனைவியின் பெட்டியிலிருந்து அகப்பட்ட இரண்டு கடிதங்களிலுள்ள எழுத்துக்களையும் ஒத்திட்டுப் பார்த்தேன். இரண்டும் வெவ்வேறு மனிதரின் எழுத்தென்பது எளிதில் தெரிகிறது. இந்தக் கடிதங்கள் சாமாவையரால் சிருஷ்டிக்கப் பட்ட பொய்க் கடிதங்கள் என்னும் எண்ணம் என் மனத்தில் உண்டாயிற்று; ஒர் ஆளை அனுப்பி சாமாவையரைக் கொண்டு ஒரு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு வரச் செய்தேன். அவருடைய எழுத்தும் வேறுமாதிரியாக இருந்தது. அவருடைய வீட்டில் இன்னம் வேறு ஆண்பிள்ளைகள் இருக்கிறார்களோ வென்று விசாரித்துப் பார்த்தேன். அவருடைய தம்பி ஒருவன் உத்தியோகமில்லாமல் இருப்பதாக உணர்ந்து, அவனைத் தந்திரமாக வரவழைத்து, அவனுக்குப் போலீசாபீசில் குமாஸ்தா வேலை செய்து கொடுப்பதாகச் சொல்லி, ஒரு மனு எழுதச் செய்து அதை வாங்கிக் கொண்டேன். அந்த மனுவின் எழுத்தும் உங்களுடைய மனைவியின் பெட்டியிலிருந்த கடிதங்களின் எழுத்தும் ஒன்றா யிருக்கின்றன. அவனே இந்தப் பொய்க் கடிதங்களை எழுதினவன் என்பது நிச்சயமாகத் தெரிகிறது; அந்த மனுவையும் இதனுடன் கோர்த்திருக்கிறேன். இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/264&oldid=1252440" இலிருந்து மீள்விக்கப்பட்டது