பக்கம்:மேனகா 2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

265

கொந்தளித்தது; உடனே உலக்கையை எடுத்து பெருந்தேவி, கோமளம், சாமாவையர் ஆகிய மூவரின் மண்டைகளையும் ஒரே அடியாக அடித்துச் சுக்கல் சுக்கலாகப் பிளந்து காற்றில் துற்றிவிடலாமா வென்று அவன் நினைத்தான். முற்றிலும் களங்க மற்றவளும் நிரபராதியுமான தனது மனைவி அநியாயமாகத் தற்கொலை செய்துகொண்டாளே என்ற ஆத்திரமும், துக்கமும், அழுகையும், பொங்கி யெழுந்தன; வீராவேசத்தோடு எழுந்த பலவகை உணர்ச்சிகளால் அவன் முற்றிலும் மேற்கொள்ளப் பட்டவனாய், என்ன செய்வ தென்பதை அறிய மாட்டாமல் துடிதுடித்து சிம்மகர்ச்சனை செய்தான். ஹிரணியனது குடலைக் கிழித்து மாலையாக அணிந்து கொள்ளும் எண்ணத்தோடு தூணைப் பிளந்து கொண்டெழுந்த உக்கிர நரசிம்ம மூர்த்தியைப்போல படபடத்து அவன் கோபமே உருவாகக் கட்டிலை விட்டு எழுந்திருக்க முயன்றான்; முதலில் அக்காள் முதலியோரிடம் சென்று அவர்களது வஞ்சகத்தை வெளியிட்டு யாவரையும் ஒரே வெட்டாக வெட்டிவிட நினைத்தான். அதே நிமிஷத்தில் எழுந்துபோய் புனிதவதியான மேனகாவைத் தேடலாமா வென்னும் எண்ணம் தோன்றியது. ஆனால், பலர் அதற்கு முன் தேடிப் பயனில்லாமல் போயிருக்க, தான் இன்னமும் தேடினால் மாத்திரம் தற்கொலை செய்து கொண்டவள் திரும்பி வருவாளோ வென்று நினைத்து அவன் நம்பிக்கையையும் தைரியத்தையும் இழந்தான்; கட்டிலை விட்டு எழுந்திருக்க இரண்டொரு முறை முயன்றான்; ஆனால், அவன் தனது முழங்காலை ஊன்றக் கூடவில்லை யாகையால், மிகவும் தத்தளித்தவனாய் மெத்தையில் சாய்ந்தான்; கடிதத்தைத் திரும்பவும் நோக்கினான்; கடிதத்தில் கோர்க்கப்பட்டிருந்த மற்ற கடிதங்களையெல்லாம் படித்தான்; மேனகாவை மரைக்காயருக்கு விற்றுவிட்டதாக எழுதப்பட்டிருந்த கடிதம் தன் தங்கை கோமளத்தினால் எழுதப்பட்டிருந்ததையும், அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/266&oldid=1252442" இலிருந்து மீள்விக்கப்பட்டது