பக்கம்:மேனகா 2.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

மேனகா

எனக்குப் பெண்டாட்டியாக வர இணங்கினாலும், என் மனம் மாறி அவற்றில் விருப்பங் கொள்ளுமா? பதிவிரதா சிரோ மணியான என் மேனகாவைக்கண்ட கண்கள் இனி இன்னொரு பெண்ணைக் காணுமா? என் உயிருக்குயிரான அந்த அருங்குண உத்தமியைத் தொட்டணைத்த கைகள் இன்னொரு ஸ்திரீயைத் தீண்டுமோ? வேறு கலியாணம் என்ற சங்கதியையே, தயவு செய்து என்னிடம் பேச வேண்டாம்; இத்தனை நாட்கள் நீ இரவு பகலாய் ஒரு நிமிஷமும் என்னை விட்டகலாமல் என்னோடிருந்து நொடிக்கொருதரம் எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து உதவின தெய்வமாகிய உன்னுடைய மனம் புண்ணாகும்படி நான் பேசுவது கூடாது. எவ்வளவோ பாடுபட்டு நீ காப்பாற்றிய உயிரை நான் ஒரு நிமிஷத்தில் விட்டுவிட நினைப்பது உன் மனசுக்குப் பெருத்த துன்பத்தைச் செய்யுமென்பது நிச்சயம். நான் இனிமேல் சுகப்படு வேனென்று நினைத்து நீ என்னைக் காப்பாற்றி விட்டாய். என் மேனகாவை இழந்த பிறகு நான் இனி ஆயுட் காலம் முழுதும் ஒயா வேதனைக்கே ஆளாயிருப்பேன். ஆகையால், அப்படி வேதனைப் படுவதைவிட, உயிரை விடுவதே மேலானது. நான் இதுவரையில் இந்த உலகத்திலுள்ள பெண்களில் மேனகா ஒருத்தி யிடத்திலேயே ஆசை வைத்தேன்; வேறு ஸ்திரீகளையே நான் மனதாலும் நினைத்ததில்லை. அவள் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொள்ள எப்படி உயிரை விட்டாளோ அம்மாதிரியே, நான் அவளை இழந்ததற்காக உயிரை விடவேண்டுமல்லவா? என் மேல் அவள் வைத்த பிரியத்துக்கு இந்த உலகமும் ஈடாகுமா? அவள் எனக்குத் தெய்வமாக வன்றோ இருந்தாள். அவளைப்போல என்மேல் யாராகிலும் பிரியம் வைப்பார்களா? ஒரு நாளுமில்லை” என்றான். அதைக் கேட்ட பணிமகள் புன்னகை செய்து, “அப்படியானால், நான் உங்கள் மேல் ஆழ்ந்த பிரியம் வைத்திருக்கிறேனென்றும், என்னைவிட்டு ஒரு நிமிஷங்கூடப் பிரிந்திருக்க உங்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/279&oldid=1252456" இலிருந்து மீள்விக்கப்பட்டது