பக்கம்:மேனகா 2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

285

கழற்றிக் கீழே வைத்துவிட்டு ஆசையோடு அவனுக்கருகில் நெருங்கினாள். அவளது சொல்லைக் கேட்ட வராகசாமி திக்பிரமை கொண்டவனாய் அவளது முகத்தை உற்று நோக்கினான். அவளது சிரத்தின் கேசம், வெள்ளைக் காரியின் கேசத்தைப்போலப் பலவகையாக வரையப் பட்டிருந்தது. முகத்தில் வெள்ளை மா பூசப்பட்டிருந்தது. பல நாட்களாக அவளது குரலைக் கேட்கும் போதெல்லாம் அது அதற்குமுன் பழக்கமான குரலென்று அவனது மனதில் ஒர் எண்ணம் உதித்துக் கொண்டே இருந்தது; அவளது குரல் மேனகாவின் குரலைப் போல இருப்பதாக ஒவ்வொரு சமயத்தில் அவனது மனதில் பட்டதுண்டு. இப்போது தானே மேனகா வென்று அவள் சொன்னவுடன் அவளது குரலே அதைச் சந்தேகமற நிச்சயப் படுத்தியது; பலவகையான தலைமயிர்ப் பின்னலுக்குள்ளும், மேலே பூசப்பெற்ற மாவிற்குள்ளும் மறைந்து வேறுபட்டுத் தோன்றிய தனது மனைவியின் முகத்தை அவன் உடனே கண்டு கொண்டான். அவனது அப்போதைய நிலைமையை வருணிக்க யாராலாகும் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உரோமம் சிலிர்த்தது; ஆநந்தம் பரவியது; அவன் தன்னை மறந்து துள்ளிப் பாய்ந்து அவளை இழுத்துக் கட்டிலில் உட்காரவைத்து ஆவலோடு கட்டியணைத்து முத்தமிட்டு, “மேனகா! என் கண்ணே! என்னால் நீ எவ்வளவு கஷ்டத்துக்கு ஆளானாய்! ஆகா! என்ன காலம்! என்ன கோலம்!” என்று கூறிக் கண்ணீரைச் சொரிய, அவள் கரைகடந்த இன்பத்திலும் துன்பத்திலும் பொங்கிப் பொறுமி விம்மி விம்மி யழ, இருவரும் தம்மை மறந்தவராய் வாய் திறந்து பேசமாட்டாமல் ஊமைகளைப் போல அந்த ஆலிங்கனத்திலேயே பிணைக்கப்பட்டு அசை வற்று ஆநந்தவாரிதியில் ஆழ்ந்துவிட்டனர்.

"மருங்கில்லா மங்கையும் வசையில் ஐயனும்
ஒருங்கிய இரண்டுடற் குயிரொன் றாயினர்;
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/286&oldid=1252463" இலிருந்து மீள்விக்கப்பட்டது