பக்கம்:மேனகா 2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

291

பெறாதவராய் பேச்சு மூச்சற்று ஒரு நிமிஷநேரம் ஸ்தம்பித்து நின்றனர். மேனகாவைக் கண்ட கனகம்மாளோ கன்றைப் பிரிந்து கண்ட தாயைப்போல, “ஆ! மேனகா!” என்று வீரிட்டுக் கத்திக் கொண்டு அம்பு பாய்வதைப் போல ஒரே பாய்ச்சலில் பாய்ந்து மேனகாவைப் பிடித்து இறுகத் தழுவி யெடுத்தாள். தங்கம்மாள், இன்னமும் தளர்வடைந்த நிலைமையி லிருந்தாளே அவள் தன்னை முற்றிலும் மறந்து கனகம்மாளைத் தொடர்ந்தோடி மேனகா, கனகம்மாள் ஆகிய இருவரையும் ஒன்றாகச் சேர்த்து ஆவலோடு ஆலிங்கனம் செய்தவளாய், “என் கண்ணே! உனக்கு என்னென்ன கஷ்டம் வந்ததம்மா!” என்று கூறி வாய்விட்டுக் கதறினாள். அவர்கள் மூவரும் அணைத்துக் கொண்டு அழுது ஆநந்தக் கண்ணிர் விடுத்துப் பாகாய் உருகிய காட்சி கல்லையும் கரையச் செய்யும் பரிதாபகரமான காட்சியாக இருந்தது. கனகம்மாளும், தங்கம்மாளும் குழந்தையை எடுப்பதைப்போல மாறி மாறி மேனகாவை எடுத்தனைத்து முத்தமிட்டு பிரலாபித்ததைக் கண்ட வராகசாமி விம்மி விம்மி யழுது தனது படுக்கையில் கிடந்து தத்தளித்தான்; அவனது மனதில் சகோதரிமாரின் மீது மிகுந்த கோபமும், ஆத்திரமும் பொங்கி யெழுந்தன; அவர்களது பெருத்த வஞ்சகத்தை அத்தனை மனிதருக்கும் முன்பாக வெளியிட்டு அவர்களை அவமானப்படுத்தி, தக்கவாறு தண்டிக்க வேண்டுமென்னும் எண்ணம் தோன்றி வதைத்தது.

திடீரென்று பெருத்த திகைப்படைந்த பெருந்தேவி இரண்டொரு நிமிஷத்தில் துணிவடைந்தாள். இரகசியம் முற்றிலும் வராகசாமிக்குத் தெரிந்துவிட்ட தென்பது அவளது மனதில் நிச்சயமாய்ப் பட்டதேனும் தான் துணிந்து வாயடி யடித்துத் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்று அவள் ஒருவாறு உறுதி செய்துகொண்டாள். தமக்கு விஷயம் ஒன்றுமே தெரியா தென்று சொல்லிவிடவும், மேனகா நாடகக்காரனோடு சென்றவளென்றே அழுத்தந்திருத்தமாகக் கூறவும் தீர்மானித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/292&oldid=1252468" இலிருந்து மீள்விக்கப்பட்டது