பக்கம்:மேனகா 2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

மேனகா

கொண்டவளாய், அவள் மிகுந்த ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் காண்பித்து, “அடே வராகசாமி! என்ன காரியம் செய்தாய் உன்னுடைய புத்தி இப்படிப் போகுமா இவள் செய்த காரியத்தைப் பார்த்து ஊர் சிரிக்கிறதே! இந்தக் கூத்தாடிச்சியை நம்முடைய வீட்டில் சேர்க்கலாமா? நம்முடைய வீட்டில் இனிமேல் நாய்கூட ஜலபானம் செய்யாதே; முன்னால் இவர்களை யெல்லாம் வெளியில் போகச்சொல்; என்னுடைய பங்களாவில் இவர்கள் ஒரு நிமிஷமும் இருக்கக்கூடாது. போகச் சொல்” என்று பெருத்த கூச்சலிட்டு அதிகாரமாகக் கூறி வராகசாமியை அதட்டினாள். அதற்குமுன் அவன் தங்களது சொல்லை வேதவாக்கியமாக மதித்து அதன்படியே செய்து வந்ததைப் போல அப்போதும் அடங்கிப்போவானென்று பெருந்தேவியம்மாள் நினைத்தே அவ்வாறு கூறினாள். ஆனால், அந்த மருந்து இப்போது பலிக்காமல் போயிற்று. அவளது சொற்கள் எரியும் நெருப்பில் எண்ணெயை வார்ப்பதைப்போல அவனது கோபத்தைக் கிளப்பி விட்டன; அவன் கோபங்கொண்ட ஆண் சிங்கத்தைப் போலானான். அவனது தேகமும் சொற்களும் படபடத்துத் தோன்றின; அவன் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு “அடி துஷ்டை! வாயை மூடு!! இனிமேல் இவர்களைப் பற்றி அவமரியாதையாகப் பேசினால், நாக்கை யறுத்துவிடுவேன்; வீணாக என்னுடைய கோபத்தைக் கிளப்பிவிட்டு அவமானப் படாதே; நடந்த சங்கதி யெல்லாம் எனக்குத் தெரியும். என்னிடம் இனிமேல் வாலையாட்டாதே. என் முன்னால் நிற்காதே! போ வெளியில்; உன்னைப்பார்க்க கண் கூசுகிறது; துரோகி!” என்று உரக்கக் கூவினான்.

அதைக் கேட்ட பெருந்தேவியம்மாள் உடனே நரசிம்மாவ தாரமெடுத்தவளாய், “என்ன கொலை சங்கதியடா நீ தெரிந்து கொண்டாய்? நாடகக்காரப் பயலோடு கெட்டலைந்து விட்டு வந்த விபசாரி நாய்க்கு வேஷம்போட்டு என்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/293&oldid=1252469" இலிருந்து மீள்விக்கப்பட்டது