பக்கம்:மேனகா 2.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

மேனகா

அவமானம் வந்தாலென்ன? நமக்கு அவமானம் வந்தாலென்ன? வேண்டாம் பொறுத்துக் கொள்ளுங்கள்.” மகா பாதகியான பெருந்தேவியின் விஷயத்தில் மேனகா அவ்வாறு பரிந்து பேசியது வராகசாமியின் மனதிற்கு அருவருப்பைத் தந்தது. அவன் அவளைப் பாராமல் அதிருப்தியாக இன்னொரு பக்கம் திரும்பினான். அப்போது மேனகா, வராகசாமியிடத்தில் தன்னைக்குறித்து ஏதோ கோள் சொல்லுகிறாளென்று நினைத்துக்கொண்ட பெருந்தேவியம்மாள் மிகுந்த கோபத்தோடு மேனகாவைப் பார்த்து, “குடியைக் கெடுத்த ராக்ஷசி! என்னடி அவனுடைய காதில் மந்திரம் ஒதுகிறாய்? சட்டைக்காரி வேஷமா போட்டுக் கொண்டு வந்தாய்! இந்த வேஷம் போட, நாடகக்காரப் பயலிடத்தில் கற்றுக் கொண்டாயா? நீ எல்லா வேஷமும் போடுவாய்! நல்ல மானமுள்ள குடும்பத்தில் பிறந்தவள் இந்த மாதிரி வேஷம் போட்டுக் கொள்ளுவாளா? அவனுடைய காதிலே என்னடி குசுகுசு மந்திரம் ஒதுகிறாய்? மானங்கெட்ட நாயே! போ வெளியிலே; என்னுடைய பங்களாவிலே ஏனடி வந்தாய்? ஜாதி கெட்ட பஜாரி!; கறுத்த மூளி!” என்று மிகவும் இழிவாக அவளை வைது, தூரத்திலிருந்தபடி காலையும் கையையும் தூக்கி நீட்டி நீட்டி, உதைப்பதாகவும், அடிப்பதாகவும் காட்டினாள். கனகம்மாள் தங்கம்மாள் ஆகிய இருவரது தேகமும் துடிதுடித்தன; அவர்கள் அவமானத்தில் குன்றிப் போய் அசைவற்று நின்றனர். மேனகா, பெருந்தேவிக்குப் பரிந்து பேசியதற்குப் பதிலாக பெருந்தேவி அவளை வைததைக் காண, வராகசாமியின் மனம் கொதித்தெழுந்தது. அவனது கோபம் அப்போது உச்சி நிலையை அடைந்தது. தேகம் முற்றிலும் வியர்த்து, வெடவெடவென்று ஆடியது. அந்த நிலைமையில் அவன் அக்காளை உருட்டி உருட்டி விழித்துப் பார்த்தான்; தனது கையிலிருந்த கடிதத்தை நோக்கினான். அதைக் கண்ட மேனகா திரும்பவும் அவனுக்கருகில் நெருங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/295&oldid=1252471" இலிருந்து மீள்விக்கப்பட்டது