பக்கம்:மேனகா 2.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

மேனகா

சம்பந்தியைப் போகச்சொன்னால், அவரிடம் வாங்கின பதினாயிரம் ரூபாயை எந்தப் பாட்டன் கொடுப்பான் இந்தக் கழுதை முண்டை நாடகக்காரனிடம் பணம் வாங்கிக்கொண்டு வந்து வராகசாமியிடம் கொடுத்திருக்கிறாளோ! அடே வராகசாமி உனக்கென்ன பைத்தியமாடா! சூத்திரனோடு ஒடிப்போனவளை அழைத்துக் கொண்டுவந்து நடு வீட்டிலே வைத்துக் கொண்டாயே! என்ன மானக் கேடடா இது? ஒடிவிடு வெளியில்; இல்லாவிட்டால், நானே கழுத்தைப் பிடித்து இதோ தள்ளப்போகிறேன்” என்று அதட்டிக் கூறினாள்.

அவளது சொற்கள் வராகசாமி பொறுக்கக்கூடிய வரம்பைக் கடந்தனவாய்ப் போயின. கோபத்தினால் சிவந்த அவனது முகம் படீரென்று வெடிக்கும்போலத் தோன்றியது. அவன் மேனகாவின் வேண்டுகோளையும் மறந்தவனாய், “அடி! அக்காள்! - சே! உன்னை இனி அக்காள் என்று சொன்னால் என்னுடைய நாக்கு அழுகிப்போகும். - நீங்கள் செய்த காரியமெல்லாம் எவருக்கும் தெரியாதென்று நினைத்து நீ ஆட்டம் போடுகிறாயா? உன்னை அவமானப் படுத்த வேண்டாமென்று என்னிடம் கேட்டுக் கொள்ளும் மேனகாவை நீ தாறுமாறாகத் தூவிக்கிறாயா? விஷப்பாம்பே! இதோ பார்த்தாயா! கோமளம் எழுதிய இந்தக் கடிதம் என்னிடம் வந்திருக்கிறது. அதில் நீயும், சாமாவும் கையெழுத்துப் போட்டிருக்கின்றீர்கள். இதோ படிக்கிறேன் கேள்” என்று கடிதத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். அதற்குள் மேனகா அவனது காலைப் பிடித்துக்கொண்டு, “படிக்கவேண்டாம்; படிக்கவேண்டாம்; க்ஷமித்துக்கொள்ளுங்கள்; அக்காள் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். எனக்கு அவமானம் வந்தால் அதைப் பற்றி விசனமில்லை. அக்காளுக்கு அவமானம் வரக்கூடாது” என்று கெஞ்சி மன்றாடினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/297&oldid=1252473" இலிருந்து மீள்விக்கப்பட்டது