பக்கம்:மேனகா 2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

297


தாம் நைனா முகம்மது மரைக்காயனுக்கு எழுதிக் கொடுத்த கடிதம் வராகசாமியிடம் வந்துவிட்டது என்ற சங்கதியை உணர்ந்தவுடன் பெருந்தேவியம்மாள் இடி யோசையைக் கேட்ட நாகத்தைப்போல நடுநடுங்கிப் பின் வாங்கினாள். முகம் கீழே கவிழ்ந்தது; அவள் சுவரில் சாய்ந்தாள். கோமளம் சாமாவையர் ஆகிய இருவரும் முக்காற்பாகம் உயிரை இழந்தவர்களாகக் கீழே கவிழ்ந்த சிரத்தோடு அசைவற்று நின்றனர். தாங்கள் செய்ததை இனி மறைக்க முடியாதென்று கண்டவுடன், அம்மூவரும் குலை நடுக்கமும் பெருந்திகிலும் கொண்டு நெருப்பின் மீது நிற்போரைப் போல மிகவும் தத்தளித்து நின்றனர். அந்த ஒரு நொடியும் ஒருயுகத்தின் நரகவேதனையை அவர்களது மனதில் உண்டாக்கியது. பெருத்த ஜனக் கும்பலுக்குமுன் நிருவாணமாக நிறுத்தப்படுவோர் எவ்வாறு வெட்கத்தினால் வதைப் படுவார்களோ அவ்வாறு அம்மூவரும் பெருவேதனை அடைந்தனர். அவர்களது தேகங்கள் ஒரு சாணளவாய்க் குன்றின. என்ன செய்வதென்பதை அறிய மாட்டாமல் அவர்கள் அடங்கிப் போயினர். அப்போது அவ்விடத்தில் அற்பமான ஒசையுமின்றி நிசப்தமே குடிகொண்டிருந்தது.

அதே நிலைமையில் அவர்களிருந்த அறைக்கு வெளியில் யாரோ மனிதர் வந்த காலடியோசை மிகுதியா யுண்டாயிற்று: அடுத்த நொடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமயசஞ்சீவி ஐயரும், போலீஸ் ஜெவான்கள் நால்வரும் போலீஸ் உடையில் பிரசன்ன மாயினர். சமய சஞ்சீவி ஐயர் ஒன்றையும் அறியாத பரம சாதுவைப்போல வராகசாமிக் கெதிரில் வந்து விறைப்பாக நின்று சலாம் செய்தார். அவ்வாறு செந்தலைப் பூச்சிகள் திடீரென்று அங்கே தோன்றியதைக் கண்ட ஆண் பெண்பாலர் யாவரும் திடுக்கிட்டு அச்சமும் திகைப்பும் அடைந்தனர். மேனகா, கனகம்மாள், தங்கம்மாள் ஆகிய மூவரும் நாணமுற்று ஒரு பக்கமாக விலகிக்கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/298&oldid=1252474" இலிருந்து மீள்விக்கப்பட்டது