பக்கம்:மேனகா 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மேனகா

இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்டால், பெண்பிள்ளைகள் தமது வீட்டின் படியைவிட்டு அப்புறம் போவது கற்புக்கு அழகல்லவென்று அவர்களுக்குப் புராணங்களிலிருந்து பதிவிரதைகளின் வரலாறுகளைச் சொல்ல ஆரம்பிப்பாள். ஆனால், உண்மைக் காரணம் அதுவன்று. அவள் காதறுந்த ஓர் ஊசியின் பொருட்டுக் கூட, தனது கற்பையும், ஆத்மாவையும், அடகு வைக்கத் துணிந்த உத்தமி. அவள் வெளியில் வராத காரண மென்னவெனில், அவளுக்கிருப்பவை விலையுயர்ந்த இரண்டு பட்டுப்புடவைகளே யாகும். அவை, வீட்டை விட்டுவெளிப்படும்போது மாறி மாறி யணியப்படுபவை. வீட்டிற்குள் ஒரு கந்தையால் இலை மறைவு காய் மறைவாய் தனது உடம்பை மறைத்துக் கொண்டிருப்பாள். அவளுடைய அடுப்பு மூன்று நாளைக்கொருமுறை புகையும். ஆனால் காலை வேளையில் வீட்டின் வாசலில் சாணித் தண்ணிர் தெளிக்க வரும்போது நூறு ரூபாய் விலை மதிப்புள்ள பட்டுப்புடவை, சில ஆபரணங்கள் முதலியவற்றை அணிந்திருப்பாள். பெருத்த வெள்ளிச் செம்பில் சாணித் தண்ணீர் கொணர்ந்து, சந்திரமதி காலகண்டையர் வீட்டில் வேலை செய்ததைப் போல, அவ்வாறு செய்வது தனது மேன்மைக்குக் குறைவாயினும் கால வித்தியாசத்தால் அதைச் செய்ய நேரிட்டதென்பதை தனது முகத்தின் வருந்திய தோற்றத்திற் காட்டித் தண்ணீர் தெளிப்பாள். வரதாச்சாரியார் பிற்பகல் வேலைகளில் நடைத் திண்ணையில் திண்டில் சாய்ந்துகொண்டு தெருவில் செல்வோரை அமர்த்தலாகப் பார்த்துக்கொண்டிருப்பார். அவருடைய மனைவி அவருக்கு வெள்ளிக் கிண்ணியில் சிற்றுண்டி கொணர்ந்து கொடுப்பாள். அதற்குள்ளிருக்கும் சிற்றுண்டியை எவரும் பார்க்கா வண்ணம் அவர் மறைத்துச் சாப்பிடுவார். அவர் நல்ல உயர்ந்த பட்சணங்களைச் சாப்பிடுவதாக ஜனங்கள் முதலில் நினைத்துக்கொண்டனர். அவர் சாப்பிடுவ தென்னவென்பதை அறிய ஆவல் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/30&oldid=1251843" இலிருந்து மீள்விக்கப்பட்டது