பக்கம்:மேனகா 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டம்பாச்சாரி விலாசம்

29

எதிர்த்த வீட்டு இராஜகோபாலன் ஒருநாள் ஒளிந்திருந்து, அவர் மனைவி வெள்ளிக் கிண்ணியை வைத்துவிட்டுப் போனவுடனே தடதடவென்று வரதாச்சாரியிருந்த இடத்திற்கு வந்து, “இன்றைக்குப் பத்திரிகையில் என்ன விசேஷம்?” என்று கேட்ட வண்ணம் கிண்ணியைப் பார்த்து விட்டான். வரதாச்சாரி திகைத்து அதை மறைக்க முயன்றது பலியாமற் போயிற்று. வறுக்கப்பட்ட பத்துப் பதினைந்து மொச்சைக் கொட்டைகள் கிண்ணியிலிருந்ததைக் கண்டு எதிர்த்த வீட்டுக் காரன் ஏமாறிப் போய்த் திரும்பினான். அவ்விஷயம் அன்று மாலைக்குள் ஊர் முற்றிலும் பரவியது. அன்றுமுதல் வரதாச்சாரியின் மனைவிக்கு ஜனங்கள் மொச்சைக்கொட்டை யென்று பெயரிட்டனர்.

இவ்விரு வேதசாரிகளும் ஒத்துழைத்துப் பல வருஷங்கள் இம்மாதிரி நாடகம் நடித்து வந்தனர். அவர்களுக்கு ஒரு சிறிய பெண்ணிருந்தது. நமது கதை நிகழ்ந்த காலத்தில் அதற்கு வயது பதின்மூன்றென்று அவர்கள் ஜாதகம் தயாரித்து வைத்துக் கொண்டிருந்தனர். தந்தையும் தாயும் செயற்கை வேஷதாரிகளா யிருந்ததைப்போல பெண் இயற்கையிலேயே வேஷதாரியாய் ஜனித்திருந்தது. அதன் உடம்பு சிவப்பாயும், குள்ளமாயும், கரணை கரணயான குண்டுக் கைகளையும், கால்களையும் பெற்று பெருச்சாளியைப் போலத் திணிந்த அங்கங்களைக் கொண்டிருந்தது. அதன் தோற்றம் உரலுக்குச் சேலை உடுத்தியதைப் போலிருந்தது. உடம்பின் கீழ்ப்பாகம் இளமையையும் மேல்பாகம் முதிர்ச்சியையும் காட்டின. அதன் முகம் இருபத்தைந்து வயதான தருணியின் முகம்போல முற்றிப்போயிருந்தது. அதற்கு இன்னம் கலியாணம் ஆகவில்லை. அந்தப் பெண்ணை பி.ஏ., பி.எல்., பட்டம்பெற்ற ஒரு பிள்ளைக்குக் கொடுக்க வேண்டுமென்பது மொச்சைக் கொட்டை யம்மாளின் விருப்பம். அத்தகைய மணமகன் கிடையாவிடின், டிப்டி கலெக்டர் பிள்ளைக்காயினும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/31&oldid=1251844" இலிருந்து மீள்விக்கப்பட்டது