பக்கம்:மேனகா 2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

மேனகா

ஐயரவாளுடைய கையில் தோடாவைப் பூட்டி விடுங்கள்! ஊர்வலமாக மேளதாளத்துடன் ஜாம்ஜா மென்று ஐயரவாள் பவனி புறப்படட்டும்” என்றார். அதைக் கேட்கவே, இடி வீழ்ந்த கட்டிடத்தைப்போல சாமாவையருடைய மனமும் தேகமும் மீளா விதமாய் கலகலத்துப் போயின; அவர் சித்தப்பிரமை கொண்டவரைப்போல மருண்டு மருண்டு விழித்து, ஒய்ந்து நின்று தவிக்கிறார்; வராகசாமி தம்மைக் காப்பாற்றுவானோ வென்று அவனை நோக்குகிறார். தாம் செய்ததெல்லாம் தவறென்றும் அவனிடம் கெஞ்சி மன்றாடுவதைப் போல அவரது பரிதாபகரமான முகம் தோன்றியது. பங்களா விஷயத்தில் தாம் முழுவதும் வஞ்சிக்கப்பட்டுப் போனதையும் எவ்வளவோ பாடுபட்டு நியாய வழியிலும் அநியாய வழியிலும் தேடிச் சேர்த்த ரூபாய் பதினாயிரத்தைந்நூறும் கூண்டோடு கைலாசம் போனதையும் கண்ட பெருந்தேவியும் கோமளமும் உப்புக்கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தியைப் போல விழித்து பட்ட மரங்களோ வென்ன உணர்வு, பேச்சு மூச்சு முதலியவின்றி அசையாது நின்றனர்.

சமய சஞ்சீவி ஐயர் புன்முறுவலோடு வராகசாமியைப் பார்த்து, “நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன். உங்களுடைய தீர்மானத்தைச் சீக்கிரம் தெரிவியுங்கள்” என்றார்.

அதைக் கேட்ட வராகசாமி, “நான் என்ன முடிவைத் தெரிவிக்கப்போகிறேன்? கடைசியில் என்னுடைய சம்சாரம் தற்கொலை செய்துகொள்ளவில்லை; டாக்டர் துரைஸானியின் உதவியால் என்னிடம் வந்து சேர்ந்துவிட்டாள். நியாய ஸ்தல்த்துக்குப் போவதானால், நீங்கள் எழுதி யிருக்கிறபடி, எனக்குப் பெருத்த அவமானம்தான் உண்டாகும்; ஆகையால், நியாய ஸ்தலத்துக்குப் போகாமலிருப்பதே நல்லதென்று தோன்றுகிறது” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/303&oldid=1252479" இலிருந்து மீள்விக்கப்பட்டது