பக்கம்:மேனகா 2.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

303


சமய சஞ்சீவி ஐயர், “அப்படியா! நிரம்ப சந்தோஷம்! பழம் நழுவிப் பாலில் விழுந்தது! நெடுநாட்களாக விட்டுப் பிரிந்த சம்சாரத்தினிடம் தனிமையில் இரகசியமான பல விஷயங்களைப்பற்றிப் பேச நீங்கள் ஆவல்கொண்டிருப்பீர்கள்: ஆகையால், நான் உங்களுடைய சந்தோஷத்துக்கு இடைஞ்சலாக இன்னமும் இங்கே நிற்பது பாவம். நான் போய்விட்டு வருகிறேன்; நற்குண முடையவர்களை ஈசுவரன் காப்பாற்று வான்” என்று கூறிவிட்டு வெளியில் நடந்தார். ஜெவான்கள் வெளியில் நடக்கும்படி சாமாவையரைத் துண்ட, அவர் அசையாமல் ஈயக் குண்டைப்போல அப்படியே நின்றார். அதைக்கண்ட இரண்டு ஜெவான்கள் உடனே தமது குட்டைத் தடிகளை எடுத்து இரண்டு விலாக்களிலுமுள்ள எலும்புகள் நொறுங்கும்படி நன்றாய் இடிக்க, ஐயர் அதைப் பொறுக்க மாட்டாமல், “ஐயோ! அப்பா!” என்று வீரிட்டு ஒசை செய்து மான்குட்டியைப்போலத் துள்ளி அறைக்கு வெளியில் அம்புபோலப் பாய்ந்தார்.

அதே நொடியில், அடுத்த பொக்கிஷ அறையிலிருந்து, “கூ! கூ! திருடன்! திருடன்! பெருந்தேவியம்மா! கோமளம்மா! திருடன்! திருடன்! வாருங்கள்! வாருங்கள்! ஒடுகிறான்! ஒடுகிறான்!” என்ற பெருத்த ஆரவாரமுண்டாயிற்று. அப்போது திடுதிடென்று சிலர் ஒடிய ஓசை உண்டாயிற்று; அதைக் கேட்டவுடன் அங்கிருந்தோர் யாவரும் பெருத்த அச்சமும் திகைப்பும் அடைந்தனர். வராகசாமியின் அறையிலிருந்து தப்பித்து அப்பால் போவதற்கு அதுவே சமயமென்று நினைத்த பெருந்தேவியம்மாளும் கோமளமும் ஓடினர்; கனகம்மாள், தங்கம்மாள், மேனகா ஆகிய மூவரும், வேடனைக் கண்ட மான்களைப்போல நடுநடுங்கி விழித்துக்கொண்டு நின்றனர். ஜெவான்கள் நால்வரும் சாமாவையரைச் சமயசஞ்சீவி ஐயரிடம் ஒப்புவித்துவிட்டு, ஓசையுண்டான இடத்தை நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/304&oldid=1252480" இலிருந்து மீள்விக்கப்பட்டது