பக்கம்:மேனகா 2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

309

பணம் எஜமானருடைய அவசரத்திற்கு வேண்டி யிருக்கிறது; ஒன்றுக்கு மூன்றாக அவரிடம் வாங்கிக் கொடுத்து விடுகிறே னென்று சொல்லிப்பார்த்தேன். என் சொல் செவிடன் காதில் சங்கை ஊதியதைப் போலாயிற்று. அதன் பிறகு நான் என்ன செய்வேன்; எனக்கு ஒரு யோசனையும் தோன்றவில்லை. எப்படியாவது பணம் வாங்கி யனுப்ப வேண்டுமென்று என்னைக்காட்டிலும் என்னுடைய பெண்டாட்டியே அதிக கவலைப்பட்டாள். சும்மாவிருக்க எங்களுக்குச் சகிக்கவில்லை. தலையை அடகு வைத்தாவது பணம் வாங்கி இந்த ஆபத்தில் உதவ வேண்டு மென்று என் சம்சாரம் இரவு பகலாய் என்னை இடித்தாள். என் மனது அதற்குமேல் உள்ளூற இடித்துக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் கூடிப் பேசிப் பேசிக் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தோம். எங்களுடைய ஒரே மகளான பத்மாவதிபாயி ருதுவாய் இரண்டு வருஷ மாகிற தென்பதும், அவள் மிகுந்த அழகுடையவளென்பதும், நன்றாகப் படித்தவ ளென்பதும், அவளை நாங்கள் செல்வக் குழந்தையாக வளர்த்து வந்தோம் என்பதும் தங்களுக்குத் தெரியும். எத்தனையோ பெரிய மனிதர்கள் தங்களுடைய பிள்ளைக்கு அவளைக் கலியாணம் செய்து கொடுக்கும்படி கேட்டிருந்தனர். தவிர, எங்களுடைய எதிர்த்த வீட்டில் ஹீராசாமிராவ் என்னும் பெயருடைய ஒரு வியாபாரி இருக்கிறான். அவனுக்கு மூன்று சம்சாரங்கள் இறந்து போய் விட்டார்கள். அவனுக்குப் பெண்களும், பிள்ளைகளும் மொத்தத்தில் பதினேழு பேரிருக்கிறார்கள். இப்போது அவனுக்கு வயது அறுபதாகிறது. அவன் எங்களுடைய பெண்ணை நான்காவது சம்சாரமாகக் கலியாணம் செய்து கொடுத்தால், ஆயிரம் ரூபாய் எங்களுக்குத் தருவதாகச் சில மாதங்களுக்கு முன் செய்தி சொல்லியனுப்பிய தன்றி, அதைப் பற்றி அடிக்கடி ஆள் மூலமாகத் தூண்டிக் கொண்டிருந்தான். கிளியைப்போல நாங்கள் வளர்த்து வரும் குழந்தையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/310&oldid=1252486" இலிருந்து மீள்விக்கப்பட்டது