பக்கம்:மேனகா 2.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

311

பொருட்டு அவனும் அவனது மகளும் செய்த பெருத்த தியாகத்தையும் காண, மேனகா, தங்கம்மாள், கனகம்மாள், வராகசாமி ஆகிய நால்வரது மனமும் பாகாயுருக நன்றியறிவின் வெள்ளம் பொங்கியது. தேகம் பூரித்துப் புளகாங்கித மடைந்தது. உடனே கனகம்மாள் மிகவும் உருக்கமாக, “ஐயோ! பாவம் ரெங்கராஜாவைப் போல வேறு மனிதன் உலகத்தில் கிடைப்பானா! அடாடா! என்ன குணம்! என்ன குணம்! கேவலம் சேவகனென்றும், படிக்காத முட்டா ளென்றும் ஜனங்கள் இழிவாக மதிக்கிறார்களே! படித்த முட்டாள்களிடம் இம்மாதிரியான உண்மைப் பரோபகாரமும், தியாக குணமும், வள்ளலின் தன்மையும் இருக்குமா? அவனுக்கு நாம் இந்த ராஜ்யத்தையே சன்மானம் செய்தாலும் அது ஈடாகுமா? ஆகா! மனிதனிருந்தாலும் இப்படியல்லவா இருக்க வேண்டும்! இப்படிப்பட்ட உத்தமனான புத்திரனை எந்தப் புண்ணிய வதியின் வயிறு தாங்கிப் பெற்றதோ?” என்று கூறிப் பெரு விம்மிதம் அடைந்தாள்.

அதைக் கேட்ட மேனகா, “அவனுடைய சம்சாரமும், பெண்ணும் நல்ல குணத்தில் அவனை மீறியவர்களாக இருக்கிறார்களே! புருஷன், பெண்ஜாதி, மகள் ஆகிய மூவரும் ஒரே மனதை உடையவராயும் நற்குணம் உடையவராயும் அமைவதைவிட, மனிதர் அடையும் பாக்கியம் வேறுண்டா! அப்படிப்பட்டவர்களுடைய வாழ்க்கைக்குச்சுவர்க்கபோகமும் ஈடாகாது” என்றாள்.

தங்கம்மாள்:- இவர்களுக்கு ஈசுவரன் ஒரு நாளும் குறைவு வைக்க மாட்டான்- என்று மிருதுவாகக் கூறித் தனது மனமார்ந்த நன்றியறிவைக் காட்டினாள்.

கனகம்மாள்:- சரி, மேனகா மேலே படியம்மா! அவன் இன்னும் என்னென்ன காரியங்களைச் செய்திருக்கிறானென்று பார்க்கலாம் - என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/312&oldid=1252488" இலிருந்து மீள்விக்கப்பட்டது