பக்கம்:மேனகா 2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

மேனகா

அவர் துணிவு கொண்டு துரைத்தனத்தாருக்கு இன்னொரு அறிக்கை யெழுதி உடனே அனுப்பினார். அதில், தாம் தாசில்தாருடைய வஞ்சகத்தால் ஏமாறிப்போய், இந்த விஷயங்களை யெல்லாம் அறிந்துகொள்ளாமல் டிப்டி கலெக்டரின் மேல் எழுதியதைப் பற்றி வருந்துவதாயும், டிப்டி கலெக்டருக்கு உடனே வேலையைக் கொடுத்துவிடவும் சிபார்சு செய்து எழுதியதன்றி, தாம் சீமைக்கு அவசரமான ஒரு காரியத்தின் நிமித்தம் போக வேண்டியிருப்பதால், தமக்கு ஆறுமாத காலம் ரஜா கொடுக்கும்படியாகவும் எழுதிக் கொண்டார். அந்த அறிக்கையின்மேல் துரைத்தனத்தாரின் உத்தரவு பிறக்க சில நாட்களாகுமென்று தோன்றியது ஆகையால், அதற்குள் நான் எஜமானரைத் தேடிப் பிடிக்க எண்ணங்கொண்டேன். துரைத்தனத்தாரிடத்திலிருந்து அநுகூலமாக உத்தரவு வந்தால், செங்கற்பட்டுப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அதை அனுப்பும்படி பெரிய கலெக்டர் துரையிடம் சொல்லிவிட்டு அன்றிரவே தஞ்சாவூரை விட்டுப் புறப்பட்டேன்” என்று படித்த மேனகாவின் கண்களில் ஆநந்தக் கண்ணிர் பொங்கி இரு கன்னங்களின் வழியாக வழிந்தமை யால், எழுத்துக்கள் கண்களிற் படவில்லை; மேலே படிக்க மாட்டாமல் அவள் உடனே நிறுத்திவிட்டாள். அங்கிருந்த நால்வரும் ரெங்கராஜுவின் அரிய காரியங்களையும் பேருதவியையும் ஒப்பற்ற நாயக விசுவாசத்தையும் கண்டு மனங்கொள்ளா ஆநந்த மடைந்துகொண்டு விம்மி விம்மி யழுதனர்.

அப்போது வராகசாமி, “ஆகா! இந்தச் சொற்ப காலத்தில், எத்தனை விநோதமான காரியங்கள் நடந்திருக்கின்றன! ஒன்றை யொன்று தோற்கச் செய்கிறதே! எத்தனை ஆபத்துக்கள்! எத்தனை அவமானங்கள்! அடாடா! கேட்கச் சகிக்கவில்லையே!” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/315&oldid=1252491" இலிருந்து மீள்விக்கப்பட்டது