பக்கம்:மேனகா 2.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

மேனகா


அதைக் கேட்ட கனகம்மாள் அன்பொழுக, “தெய்வ மில்லாமலா உலகத்தின் காரிய மெல்லாம் நடக்கிறது. எவ்வளவோ அருமையான குணமும், தயாள மனசையும் உடைய நம்முடைய ரெங்கராஜுக்கு ஈசுவரன் ஒருநாளும் குறைவு வைக்கமாட்டான். பத்மாவதிபாயின் புருஷன் திருச்சிராப்பள்ளியில் இருக்கும்போது, ஹீராசாமிராவ் பணத்தைக் கொடுத்து விட்டதனால் மாத்திரம், அவனுக்கு அவள் கிடைத்துவிடுவாளா! நல்ல அழகான வாலிபனுமான படித்தவனுமான சுந்தரராவ் காத்துக்கொண்டிருக்கையில், ஹீராசாமிராவல்ல, இன்னும் இந்த தேசத்து மகாராஜா ஆசைப்பட்டாலும் காரியம் பலிக்குமா? பத்மாவதிபாயி குழந்தையா யிருந்தாலும், அவளுடைய பெரும் புத்தியும், ஜீவகாருண்யமும் பெரியவர்களுக்குக்கூட வராது. அப்பேர்ப் பட்ட தங்கமான பெண் கலங்கியழும்படி ஈசுவரன் விடு வானோ? ஒருநாளும் விடமாட்டான். உலகத்தை யெல்லாம் படைத்துக் காத்தருள்பவனும் எல்லா வற்றையும் மறைவாக இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் சர்வக்ஞனுமான பகவானுக்கு நல்லவர்களைக் காத்து ரக்ஷிக்கத் தெரியாதா?” என்று மிகவும் உருக்கமாகக் கூறினாள்.

உடனே சாம்பசிவம் ரெங்கராஜுவை நோக்கி “இந்த சுந்தரராவ் உன்னுடைய அத்தை பிள்ளையா” என்றார்.

ரெங்க:- ஆமாங்க.

கணக:- பெண்ணுக்கு அவனைக் கலியாணம் செய்து கொள்ள ஆசைதானே?

ரெங்க:- ரொம்ப ஆசை. அவனை இங்கேயே கொண்டாந்து வச்சுக்கணும். அவுங்க ரெண்டுபேரும் சந்தோஷமாக இருக்கணுமுன்னுதான், எஜமான் கலியாணத்துக்காகக் குடுத்த ரெண்டாயிர ரூபாயிக்கும் நல்ல ஒரு மச்சு வீடு வாங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/327&oldid=1252779" இலிருந்து மீள்விக்கப்பட்டது