பக்கம்:மேனகா 2.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டு முதல்

325


கனகம்மாள்:- எனக்கு மற்றவரைப்பற்றியெல்லாம் அவ்வளவு விசனமில்லை. ஊருக்குப் போன இடத்தில் தாந்தோனிராயருக்கு வந்த ஆபத்தை நினைக்க நினைக்க எனக்கு நிரம்பவும் விசனமாக இருக்கிறது. ஏனடா! ரெங்கராஜு! அவருக்குச் சொத்து ஏராளமாக உண்டா? அவருக்குப் பக்கவாதம் (பாரிசவாதம்) வந்து கைகால் களெல்லாம் இழுத்துக் கொண்டு போய்விட்டதாம்; அதற்கு எல்லாப் பணமும் செலவாய் விட்டதாம். அந்த நோயும் தீராதாம். இந்த நிலைமையில் அவருடைய பெண்டு பிள்ளைகள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்?

ரெங்க:- நாங்கூட அப்பிடித்தான் கேள்விப்பட்டேன். அவுரு இருந்தவரையிலே பணத்தை யெல்லாம் சேத்து சேத்து மொத்தமாகத் தேவிடியாளுக்குக் கொடுத்து வந்தாரு. இப்போ ஊட்டிலே ஒரு காசுக்குக் கூட வழியில்லை. அவரோட பெண்சாதி பிள்ளைங்களெல்லாம் பெரிய மணிசரிடத்தி லெல்லாம் போயி யாசகம் வாங்கி வந்து அவருக்குக் கஞ்சி வாக்கிறாங்களாம்.

கனக:- ஆகா என்ன உலகம் இது! என்ன தலைவிதி! அடுத்த நிமிஷத்தில் நமக்கு எவ்விதமான கேவல நிலைமை உண்டாகும் என்பது தெரிகிறதே இல்லையே; என்ன உத்தியோகம்! என்ன வீண் பெருமை! எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை - என்றாள்.

அதைக் கேட்டு சிறிது நேரம் பேசாமலிருந்த சாம்பசிவம், “எனக்கு இதெல்லாம் ஆச்சரியமாகத் தோன்றவில்லை. ரெங்கராஜுவுக்கு நாநூறு ரூபாய் கொடுத்த கிழவனாகிய ஹீராசாமி ராவ் ஒரு நாளைய ஜுரத்தில் திடீரென்று செத்துப் போனதை நினைக்க நினைக்க, என் மனம் சந்தோஷத்தினால் பூரித்துப் போகிறது” என்று கூறி குழந்தையைப்போல சந்தோஷங் காட்டிப் புன் முறுவல் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/326&oldid=1252778" இலிருந்து மீள்விக்கப்பட்டது