பக்கம்:மேனகா 2.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

மேனகா


கனகம்மாள், "அப்பா! ரெங்கராஜு! உன்னை நாங்கள் அன்னியனாகவே பாவிக்கவில்லை. நீ வேறென்றும் சாம்பசிவம் வேறென்றும் நான் எண்ணவே இல்லை. நீ முதற் பிள்ளை, சாம்பசிவம் இரண்டாவது பிள்ளை” என்று அன்பொழுகிய மொழிகளால் கூற, அவன் பெரிதும் நாணமடைந்து உட்காராமல் நின்று கொண்டே இருந்தான்.

பிறகு சில நிமிஷங்கள் வரையில் பேசாமலிருந்த சாம்பசிவம் கனைத்துக் கொண்டு, “நான் கலெக்டராக வந்த இந்த மூன்று மாச காலத்துக்குள் இந்த ஊரில் எத்தனை மாறுதல்கள்! பழைய உத்தியோகஸ்தர்கள் எல்லோரும் போய்விட்டார்களே! இப்போது எல்லாம் புது முகமாகவே இருக்கிறதே!” என்று வியப்போடு கூறினார்.

கனகம்மாள்:- அப்படி யார் போய்விட்டார்கள்?

சாம்பசிவம்:- பெரிய கலெக்டர் துரை சீமைக்குப் போய்விட்டார். கஜானா டிப்டி கலெக்டர் விளக்கெண்ணெய் சுப்பராய ஐயர் உபகாரச் சம்பளம் வாங்கிக் கொண்டு போய் விட்டார். போலீஸ் சூபரின்டெண்டெண்டோ திருச்சிக்கு மாற்றலாகி போய்விட்டார்; போலீஸ் இன்ஸ்பெக்டர் புளுகு மலைப் பிள்ளையோ போலீஸ் ஸ்டேஷனில் அடைக்கப்பட்டிருந்த ஒரு திருடனை முரட்டுத் தனமாக அடித்துக் கொன்றதற்காக தீவாந்திர சிட்சை யடைந்து அநியாயமாகக் கெட்டுப்போய்விட்டார். நம்முடைய தாசில்தார் தாந்தோனிராயர் தான், நான் பெரிய கலெக்டராக வரப்போகிறேன் என்பதைக் கேட்டவுடன் ரஜா வாங்கிக் கொண்டு தம்முடைய சொந்த ஊராகிய நாமக்கல்லுக்குப் போய் விபரீதமான நிலைமையி லிருக்கிறார். இந்த மாதிரி எல்லோரும் போய்விட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/325&oldid=1252777" இலிருந்து மீள்விக்கப்பட்டது