பக்கம்:மேனகா 2.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டு முதல்

323


அவர்கள் நால்வரும் கபடமின்றி, மனத்தை விட்டு ஒருவரோடொருவர் அந்தரங்கமான அன்போடு ஏதோ விஷயங்களைப் பற்றி சந்தோஷமாகப் பேசி மகிழ்வடைந் திருந்தனர்.

அந்தச் சமயத்தில் சாம்பசிவம் கனகம்மாளைப் பார்த்து, “ரெங்கராஜூவுக்கு மாத்திரம் இங்கிலீஷ் தெரிந்திருந்தால், அவனுக்கு நான் ஒரு தாசில் வேலை செய்து வைத்திருப்பேன். அவனும் அந்த வேலையைத் திறமையாகப் பார்ப்பான். அந்த வேலை பார்ப்பதில் என்ன கஷ்டமிருக்கிறது. ஒன்றுமில்லை. வெறும் மிரட்டல்தான்” என்றார்.

அதைக் கேட்ட கனகம்மாள், “அவன் வேறே எந்த உத்தியோகத்துக்கும் போகவேண்டாம்; நம்முடைய பங்களாவுக்கே அவன் தாசில்தாராக இருக்கட்டும்; இந்தத் தாசிலுக்கு உங்களுடைய இங்கிலீஷ் பாஷையே வேண்டாம்; சர்க்காரில் தாசில்தாருக்குக் கொடுக்கும் சம்பளம் எவ்வளவோ அதை நீ கொடுத்துவிடு” என்று கூறினாள். சாம்பசிவம் “அப்படியே செய்வோம்” என்று ஒப்புக்கொண்டார்.

பிறகு கனகம்மாள் ரெங்கராஜுவைப் பார்த்து, “அப்பா ரெங்கராஜு! அப்படியே உட்கார்ந்துகொள்; எத்தனை நாழிகை நிற்கிறது பாவம்!” என்று நிரம்பவும் உருக்கமாகக் கூறினாள்.

அதைக் கேட்ட ரெங்கராஜு சிறிது லஜ்ஜை அடைந்து பணிவாகத் தனது இரு கைகளையும் கூப்பி, “அம்மா! தாங்கள் பிரம்மகுலம்; நான் எவ்வளவு தங்களுடைய அபிமானத்தை யடைந்தாலும், நான் சேவகன்தானே; தங்களுக்கு நான் தொண்டு செய்யவே பிறந்தவன். எனக்கேன் அவ்வளவு பெருமை!” என்றான். அவனது உண்மையான பணிவையும் நற்குணத்தையும் கண்ட சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய இருவரது உள்ளமும் பூரித்துப் பொங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/324&oldid=1252776" இலிருந்து மீள்விக்கப்பட்டது