பக்கம்:மேனகா 2.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

மேனகா

பக்கத்திலிருந்த தகட்டில், “தஞ்சை ஜில்லா கலெக்டர் சாம்பசிவம்” என்ற விலாசமும், இடது பக்கத்திலிருந்த தகட்டில், “தஞ்சை சப் ஜட்ஜ் வராகசாமி ஐயங்கார்" என்ற விலாசமும் காணப்பட்டன. அங்கு வருவோரைப் புன்னகை செய்து வரவேற்பவைபோல எதிரில் தோன்றிய பூந்தொட்டி களின் அணிவகுப்பு அமைக்கப்பட்டிருந்த அழகிய மூன்றடுக்கு மெத்தையுள்ள மாளிகை கம்பீரமாக நின்றது. அதன் வாசலில் வெள்ளிவில்லை, டாலி, டவாலி முதலிய அலங்காரங்களுடன் எண்ணிறந்த சேவகர்களும் போலீஸ் ஜெவான்களும் ஒசை செய்யாமல் பயபக்தியோடு நின்றும் உட்கார்ந்தும் காணப்பட்டனர்.

அந்த மாளிகையின் இரண்டாவது மெத்தையில் மிகவும் சிங்காரமாக அழகுபடுத்தப்பட்டிருந்த ஒரு கூடத்தில் சாம்பசிவையங்கார் சாய்மான நாற்காலி யொன்றில் படுத்திருந்தார். சுவர்ண விக்கிரகம்போல வொளிர்ந்த தங்கம்மாள் அவருக்குப் பின்புறத்தில் மறைவாக உட்கார்ந்துகொண்டு சிறிதளவு கிழிந்துபோயிருந்த தனது பட்டு ரவிக்கையைத் தைத்துக் கொண்டிருந்தாள். சாம்பசிவத்திற்கு எதிரில் கொஞ்சதுரத்திற்கப்பால், வெள்ளிக் குமிழ்கள் வைக்கப்பட்ட அகன்ற வழுவழுப்பான கருங்காலி மணைப் பலகையொன்றின் மேல் நார்மடிப்புடவை, துளசி மணி மாலை, மூக்குக்கண்ணாடி முதலிய அலங்காரங்களுடன் கனகம்மாள் மிகவும் ஆசாரமாக உட்கார்ந்திருந்தாள். அவளது கையில் பழைய காலத்துப் புஸ்தகமொன்று இருந்தது. அதன் முதல் பக்கத்தில், “துலா காவேரிப் புராணம்” என்ற எழுத்துகள் காணப்பட்டன. சற்று தூரத்திலிருந்த ஒரு புஸ்தக பீரோவின் மறைவில் ரெங்கராஜு அடக்கவொடுக்கமாக நின்று கொண்டிருந்தான்; அவனது உடம்பில் அப்போது சேவகன் உடைகள் காணப்படவில்லை. அவனும் ஒரு உத்தியோகஸ்தனைப் போலக் காணப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/323&oldid=1252775" இலிருந்து மீள்விக்கப்பட்டது