பக்கம்:மேனகா 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டம்பாச்சாரி விலாசம்

39

சிற்றுண்டிகளைத் தயாரித்து, அந்தப் பெருந் தெய்வத்திற்குப் படைத்து நிவேதனம் செய்வித்தனர். எவ்விதமாயினும் தமது பெண்ணை உயர்வான இடத்தில் கொடுக்கவும், தம்மீதுள்ள ஜாதிக் கட்டை விலக்கிக் கொள்ளவும் அவர்கள் மிகுந்த ஆவல் கொண்டிருந்தனர். தவிர, தமது பெண் அலியாதலால் பிறக் காலத்தில் புருஷனோடு அவள் வாழ்க்கை செய்யாவிடினும், அவளுடைய சவரட்சணைக்குத் தேவையான பெரும் பொருளாயினும், அவளது புக்ககத்திலிருந்து கிடைக்குமென்று நினைத்தனர். இந்த மூன்று காரணங்களினால் அவர்கள் இந்தச் சம்பந்தத்தையே கொண்டுவிட உறுதி செய்து கொண்டு, அதற்குத் தகுந்த கருவியாகிய சாமாவையரை சரணாகதரக்ஷகராக அடைந்து அவருக்குத் தொண்டு புரிந்தனர்.

சாமாவையர் அன்றிரவு போஜனத்தை மாலை ஏழரை மணிக்கே முடித்துக்கொண்டார். நாகைப்பட்டணம் சென்று பங்களாவின் விக்கிரயப் பத்திரத்தை மறுநாளே முடித்துக் கொண்டு, சென்னைக்குத் திரும்ப நினைத்தவராய், இரவு ஒன்பது மணிக்குக் கும்பகோணத்திலிருந்து புறப்பட்ட ரயிலுக்கு வந்து சேர்ந்தார். கையில் ரயில் பைக்குள் ரூபா பதினாயிரம் பவுன்களாகவும், நோட்டுகளாகவும், ரூபாயாகவும் மூட்டை கட்டப்பட்டிருந்தன. அதை மிகுந்த எச்சரிக்கையோடு வைத்துக் கொண்டு வண்டியிலேறினார். ஒருவர் கும்பகோணத்திலிருந்து நாகைப்பட்டிணம் போக வேண்டுமானால், கும்ப கோணத்தில் ரயிலேறி மாயவரத்தில் இறங்கவேண்டும். அவ்விடத்தில் வந்துள்ள வேறு ரயிலில் ஏறித் திருவாரூர் போய்ச்சேரவேண்டும். அவ்வூரில் வந்துள்ள வேறு ரயிலிலேறி நாகைப்பட்டணம் செல்லவேண்டும். கும்பகோணத்தில் வண்டியில் ஏறிய சாமாவையர், அதில் ஜனநெருக்க மில்லாமையால் உல்லாசமாகப் பலகையின் மீது காலை நீட்டி விட்டு, பக்கத்தில் சாய்ந்துகொண்டார். ரயில் புறப்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/41&oldid=1251854" இலிருந்து மீள்விக்கப்பட்டது