பக்கம்:மேனகா 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

43

வண்டியிலேயே ஏறவேண்டு மென்னும் ஒரு விருப்பம் உண்டானது. நமது சாமாவையரது தோற்றத்தை வருணித்துச் சொல்வது மிகையல்லவா! அவர் ஆண்பாலார் பெண்பாலார் ஆகிய இருதிறத்தாரும் கண்டு, முதல் பார்வையிலேயே மோகம் கொள்ளத் தகுந்த சுந்தரவடிவினர். உருண்டு, திரண்டு, மன்மதகாரமான சிவந்த மேனியின் தளதளப்பும், பரந்த வட்டவடிவமான வதனமும், வெள்ளைக் கடுக்கனும், ஜரிகை வஸ்திரங்களும் பட்டு உருமாலையும், தங்கக்கொடியில் தொங்கிய ஒற்றை உருத்திராட்சமும், மோதிரங்களும் ஒன்று கூடி கம்பீரத் தோற்றத்தையும் பெரிய மனிதத்தன்மையையும் உண்டாக்கி, காண்போரை வசீகரித்தன. அவரைக் கண்டு உள்ளூற மகிழ்ச்சிகொண்ட கமலம், வண்டி புறப்பட்டபின் மிகவும் நாணத்தைக் காண்பித்து, கடைசியாக விடை பெற்றுக்கொள்ள வெளியில் நீட்டிய தனது சிரத்தை உட்புறம் இழுத்துக்கொள்ளாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அவளது கரத்தில் வெற்றிலை பாக்கு நிறைந்த பையூர் பிரம்புச் சாயப் பெட்டியொன்றிருந்தது. அவள் கதவிற்கருகில் உட்கார்ந் திருந்தாள். சாமாவையர் அவளுக்கு எதிர்ப்புறப் பலகையின் கடைசியில் உட்கார்ந்து சாய்ந்துகொண்டு, அவளிருந்த கதவு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார். முதலில் சாமாவையர், அந்தப்பெண்ணும் அவளுடன் வந்த மனிதனும் ஏறப்போவதாக நினைத்து, ஒருவாறு அருவருப்புற்றிருந்தார். ஆனால், பெண் மாத்திரம் தனிமையில் தம்முடன் திருவாரூர் வரையில் வருகிறாள் என்பதை உணர அவரது மனம் பெருங்களிப் படைந்து, இனிமையே வடிவாகத் தோன்றிய அப்பெண்ணழகி அந்த இரவில் தம்முடன் இருப்பதைப்பற்றி ஆநந்தங் கொண்டார்.

மேல் நிகழவிருக்கும் சம்பவங்களைக் கூறப்போகுமுன், அந்தப் பெண்ணின் வயது, தோற்றம் முதலிய விவரங்களைச் சிறிதளவு விளக்குவது அவசியமாகிறது. அவளது வயது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/45&oldid=1251858" இலிருந்து மீள்விக்கப்பட்டது