பக்கம்:மேனகா 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

மேனகா

பதினாறு அல்லது பதினேழு என்று மதிக்கலாம். நல்ல பக்குவ காலத்தின் எழிலும் ஒளியும் இனிமையும் ஒன்றாக விகசித்து விரிந்து உன்னத நிலையிலிருந்து கண்டோர் கண்களையும் மனதையும் கொள்ளைகொண்டன. நடுத்தரமான உயரமும் பருமனும் கொண்ட அவளது மேனி பத்தரைமாற்றுப் பைம்பொன்னோ, எலுமிச்சைப் பழமோ தந்தமோ வென்று ஐயுறும் அழகிய நிறத்தை உடையதாயிருந்தது. நகம் முதல் சிகம் வரையிலுள்ள ஒவ்வொரு அங்கமும் அச்சில் கடைந்து பொருத்தப்பட்டதைப்போல அற்புதமாயும், இலட்சணப் பழுதின்றியும், குற்றங்கூறுதற் கிடமின்றியும் அமைந்திருந்தது. நீலம் பச்சை முதலிய பலவிதமான நிறங்களையும், நீரோட்டத்தையும் சொரியும் சில நட்சத்திரங்களைப்போல அவளது வதனத்தில் வசீகரமும் களையும் ஜிலுஜிலென்று வீசின. தந்தத் தகட்டைப்போலிருந்த நெற்றியும், கறுத்ததடர்ந்த புருவ விற்களும், பெருத்த சுத்தமான நீலோற் பல விழிகளும், மாதுளம்பூவின் செவ்விய நிறத்தைக் கொண்டு தேன்கசிந்த தீங்கணிப்போலப் பிளவுபட்ட அதரங்களும் நல்முத்தின் பதிப்பைப்போல வொளிர்ந்த பற்களும் ஒன்றுகூடி, அது முகமோ, அல்லது காண்போர் மதியை மயக்கி, மனதை வதைத்து பித்தமுறச்செய்யும் மந்திர உச்சாடனச் சக்கரமோ, மன்மதவேளின் பாணங்களது அணிவகுப்போ வெனத் தோன்றியது. நெற்றியின் உச்சியில் தொடங்கி வளைந்து வளைந்து பாலத்தின் கண்களைப்போல இரு புறங்களிலும் அற்புதமான வேலைப்பாடு தோன்ற இயற்கையில் சென்றிருந்த கருங்கூந்தலின் கற்றையை வாரிப் பின்னலிட்டு, தேருருளையோ அல்லது திண்டோவெனத் தோன்ற வளைந்து, ரோஜா, மல்லிகை முதலிய மலர்களால் அதை அலங்கரித்தாள். இருபுருவ விற்களி னிடையிலிருந்த திலகமண்டலத்தில் மூன்றாம் பிறை தவழ்ந்ததைப்போல ஜவ்வாதினால் கீற்றிட்டு, இரண்டு விற்களையும் ஒன்றாய்ச் சேர்த்திருந்தாள். கயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/46&oldid=1251859" இலிருந்து மீள்விக்கப்பட்டது