பக்கம்:மேனகா 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

51

என்னடா விலை?” என்றார். அவன், “சாமீ! இது குடகு கிச்சலிப்பழம் ஒரு அணா” என்றான். சாமாவையர், “அடே! எனக்கு ஒரு டஜன் பழம் வேண்டும். என்ன விலை சொல்லுகிறாய்?” என்று ஆடம்பரமாகக் கேட்டார். அவன் அதுவரையில் டஜன் கணக்கில் விற்றவனல்லன். அவன் தூக்கத்திலும் இருந்தமையால் கணக்கு சரியாக விளங்க வில்லை. “எடுத்துக்கொள் சாமி! சகாயமாய்த் தருகிறேன். ஒரு ரூபாய்க்குக் குறையாது ரயில் புறப்பட்டுவிடும். சீக்கிரம் ஆகட்டும்” என்றான். சாமாவையருடைய நினைவு முற்றிலும் பக்கத்தில் சுவர்ண விக்கிரகம்போல இன்பமே வடிவாய் உட்கார்ந்திருந்த உயிர்க்கமலாக் கனியின் மீது சென்றிருந்த மையால், அவர் மனது கணக்கில் செல்லவில்லை. சில்லரை கேட்டுக்கொண்டு, அவனிடம் அதிகமாக பேச்சை வளர்த்திக் கொண்டிருக்கவும் அவருக்குப் பொறுக்கவில்லை. அவன் முழு ரூபாயாகக் கேட்டதைப் பற்றி மகிழ்வடைந்தவராய் உடனே பன்னிரண்டு பழங்களை வாங்கி, அந்தப் பெண்ணிருந்த இடத்திற்கு எதிர்ப்புற பலகையில் அழகாய்ப் பரப்பினார். தாம் பணக்காரர் என்பதைக் காட்டிக்கொள்ள நினைத்தவராய், அவர் பலகையில் உட்கார்ந்துகொண்டு ரயில்பையைத் தமக்கருகில் இழுத்து அதைத் திறந்து உள்ளே இருந்த பளுவான மூட்டையைத் தூக்காமாட்டால் தூக்கி, “அப்பாடா எவ்வளவு கனம்!” என்று வாய்விட்டுக் கூறிக்கொண்டே பக்கத்தில் வைத்து அதை அவிழ்த்து, அதிலிருந்து ஒரு ரூபாயையெடுத்து கதவண்டை சென்று பழக்காரனிடம் கொடுத்தார். அதற்குள் அந்த அழகிய மங்கை தனது கடைக்கண் பார்வையை அவரது பணமூட்டையில் செலுத்தினாள். அங்கு ஏராளமான பவுன் குவியிலும், நோட்டுகளும், ரூபாய்களும் இருக்கக் கண்ட பெண்மணி பெருந்திகைப்பும் வியப்பும் அடைந்து, அந்த மனிதர் யாரோ லட்சப் பிரபு வென்று தீர்மானித்துக் கொண்டாள். அவர் பழக்காரனிடம் ஏமாறிப்போனதை அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/53&oldid=1251884" இலிருந்து மீள்விக்கப்பட்டது