பக்கம்:மேனகா 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

மேனகா

நல்லது” என்று தோல் உரிக்கப்பட்ட ஒரு பழத்தைக் கொடுக்க, அவள் மிகவும் நாணமும், லஜ்ஜையும் அடைந்தவள் போலக் காட்டித் தனது உடம்பை நெளித்துக் கொண்டவளாய்த் தயங்கி, “இல்லை; வேண்டாம், வேண்டாம்” என்று அரைமனதோடு கூறினாள். ஆனால், அவள் தனக்கு உறுதியாக வேண்டாமென்று சொல்வதாகத் தோன்றவில்லை. பழத்திற் கருகிலிருந்த தனது கையையும் அவள் அப்புறம் இழுத்துக்கொள்ளவில்லை. சாமாவையர், “பாதகமில்லை யம்மா! வாங்கிக்கொள். எல்லோருக்கும் கொடுக்கலாமென்று தானே இத்தனை பழங்கள் வாங்கினேன்” என்று அன்போடு வற்புறுத்திய வண்ணம் பழத்தை அவளுடைய கையில் வைத்தார். “எனக்கு அவ்வளவு தாகமில்லை. நீங்கள். சாப்பிடுங்கள்” என்று லஜ்ஜையோடு மொழிந்தவளாய் பழத்தை தன் கையால் பிடித்துக் கொண்டாள். அப்போது அவள் மிகுந்த இன்பமுந் துன்பமு மடைந்தாளென்பது அவளது அழகிய முகத்தில் நன்றாகத் தெரிந்தது. அதைக் கண்ட சாமாவையருடைய மனது எண்ணாததை யெல்லாம் எண்ணியது. தேகம் ஆவேசத்தால் துடி துடித்தது. எவ்வித இடையூறு மின்றி தமது எண்ணம் நிறைவேறிக்கொண்டே வருவதையும், அந்தப் பெண்ணுடைய நட்பு முற்றிக் கொண்டே வருவதையும் கண்ட சாமாவையர், தாம் சுவர்க்கலோகத்திலிருப்பதாக நினைத்துக் கொண்டார். அவளுக்கெதிரில் கதவண்டையிலேயே உட்கார்ந்து கொண்டார். பெண்மணி முதலிற் காட்டிய நாணமும் குறைந்து போனமையால், அவளும் காலைக் கீழே விடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள். எதிரில் உட்கார்ந்திருந்த சாமாவையர் இன்னம் ஏழெட்டு பழங்களை வாரி, அவளுக்கருகில் பலகையில் போட்டுவிட்டு நயமாக “சாப்பிடம்மா! வெட்கப்படாதே!” என்று கூறியவாறு தாமும் ஒரு பழத்தை எடுத்துத் தோலை உரித்துவிட்டு சுளைகளை வாயிற் போட்டுக் கொண்டு அவளை மேன் மேலும் ஊக்கினார். அவள் தனது முகத்தை வண்டிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/58&oldid=1251893" இலிருந்து மீள்விக்கப்பட்டது