பக்கம்:மேனகா 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

55

உறுதியாக நினைத்து உவகை கொண்டார். மேலும் உரையாடத் தொடங்கி, “இப்போது உன்னைக் கொணர்ந்து ஏற்றிவிட்டவர் யார்?” என்ற வண்ணம் அவள் பக்கம் நகர்ந்தார். “அவர் என்னுடைய மாமன்” என்றாள் பெண்ணரசி.

ஒவ்வொரு கேள்விக்குப் பின்னும் வால்வைப்பது போல ஐயரவர்கள் நகர்ந்து கொண்டே தனக்கருகில் வந்ததை, அந்த இன்பவல்லி உணர்ந்தா ளாயினும், அதைக் கவனியா தவளைப் போலிருந்தாள்.

ஆனால், சாமாவையர், அவளுக்குத் தெரியாமல் தாம் சாமர்த்தியமாக நகர்ந்து வருவதாக நினைத்து தம்மைத்தாமே புகழ்ந்துகொண்டவராய், “ஏனம்மா! திருவாரூர் உன்னுடைய சொந்த ஊரா?” என்றார்.

“ஆம்;அதுதான் என்னுடைய தாய்வீடு” என்று இனிமையாக விடையளித்தாள் மடமங்கை. சில நிமிஷங்களுக்கு முன்பே சாமாவையர் கமலாப்பழத்தோலை உரித்துவிட்டார். அதை அவளுக்கு முதலில் நிவேதனம் செய்யவேண்டுமென்பது அவருடைய விருப்பம். அதன் பொருட்டு அவளிடம் நெருங்கிப் பல கேள்விகளைக் கேட்டு, வழிசெய்து கொண்டார். பிறகு, “ஆகா! வண்டியிலிருப்பது எவ்வளவு வெப்பமா யிருக்கிறது! தாகம் அதிகமாக உண்டாகிறது. உனக்கு எப்படி இருக்கிறது? வியர்க்கவில்லையா?” என்றார்.

“ஆம், ஆம், நிரம்பவும் புழுக்கமாகத்தானிருக்கிறது. வெயில் காலமல்லவா?” என்றாள் மங்கை.

அவள் தமது மனதிற்கு உகந்தவிதம் விநயமாய்ப் பேசுவதைக் கண்ட சாமாவையர், மிகுந்த மகிழ்வையும், துணிவையும் அடைந்தார். அவளுடன் நெடுங்காலம் பழகிய நண்பரைப்போல தயக்கமின்றி தமது கரத்தை அவளுக்கருகில் நீட்டி, “இந்தா! இந்தப் பழத்தைச் சாப்பிடு; தாகத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/57&oldid=1251892" இலிருந்து மீள்விக்கப்பட்டது