பக்கம்:மேனகா 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

65

வந்து கெடுத்து விட்டதைக் குறித்து ஆத்திரமடைந்து தவித்தார். அங்கிருந்து வண்டி எப்போது புறப்படும் புறப்படும் என்று ஆவல்கொண்டு துடித்தார். அன்றிரவு தமது வெற்றி நிச்சய மென்று மனப்பால் குடித்தார். வண்டி நின்ற அந்த இரண்டொரு நிமிஷங்களும் நெருப்புத் தணல் மீதிருந்தவரைப் போலத் தத்தளித்தார். கிட்டாத பாக்கிய மெல்லாம் தமக்குக் கிட்டுவதால் அப்போது தமக்குச் சுக்கிர தசையாகவே இருக்க வேண்டுமென்று நினைத்தார். சில நாட்களுக்குள் பதினாயிரம் ரூபாய் கிடைத்ததும், இப்போழுது தெய்வரம்பை போன்ற ஒரு பெண் பாவை வந்து வாய்த்ததும், தமக்கு வேண்டு மென்றே ஈசுவரனால் அளிக்கப்பட்ட அதிர்ஷ்டமென்று நினைத்து அளவளாவினார். அந்தப் பூங்கோதையின் நட்பு தமக்குக் கிடைக்கப் போவதைக் குறித்துப் பேரின்பமும், வண்டி நின்றதைக் குறித்துப் பெருந்துன்பமும் அடைந்தார். அவளிடம் தாம் அடையப்போகும் பேரின்பச்சுகத்தை மனதால் பாவித்து அதிலீடுபட்டு இன்பமாய் ஆத்திரமே வடிவாய் உட்கார்ந்திருந்தார். வாய் பாட்டுப் பாடியது. கை தாளம் போட்டது. கால்கள் ஆட்டம் போட்டன. இமை கொட்டாமல் அவளது முகத்தையும், மேனியையும் ஏற இறங்கப் பார்த்துப் புன்னகை மழையால் அவற்றை அபிஷேகம் செய்தார். தாம் வாங்கும் பங்களாவில் அவளை வைத்துவிடவும், தமது ஆயுட் காலம் முழுதையும் அவளுக்கு அடிமையாயிருந்து கழிக்கவும் உறுதி செய்து கொண்டார். வண்டி புறப்பட்டவுடன் அவளைத் தூக்கி மடியில் உட்கார வைத்துக்கொண்டு கொஞ்சிக் குலாவ நினைத்து, முற்றிலும் பித்த முற்றவரா யிருந்தார்.

அந்த வடிவழகியோ தனது முகத்தில் எத்தகைய மாறு பாட்டையும் காட்டாமல் தமது சிரத்தைக் கீழே கவித்துக் கொண்டு ஒன்றையும் அறியாத நற்குணவதியைப் போலவும் சித்திரப்பாவை போலவும் உட்கார்ந்திருந்தாள்.

மே.கா.II-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/66&oldid=1251901" இலிருந்து மீள்விக்கப்பட்டது