பக்கம்:மேனகா 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

மேனகா

அழுத்தமாகக் கூறி அழைக்க, ஐயர் உடனே பெட்டிப் பாம்புபோல அடங்கிப் போய் அவளிருந்த கடைசி இடத்திற்கு எதிரில் சந்தோஷமாக உட்கார்ந்து கொண்டார். வந்த மனிதன் இரண்டொரு நிமிஷ நேரம் ஏதோ வாய்க்குள் முணுமுணுத்து விட்டுப் பிறகு மெளனமாக இருந்தான். சாமாவையரும் சாந்தமாக இருப்பவரைப்போலக் காணப்படினும், அவரது மனம் ஆத்திரத்தால் கொதித்தது. அந்தப் படுபாவி வராதிருந்தால் அந்நேரம் தாம் எவ்வளவு சுகமதுபவித் திருக்கலாமென்று நினைத்து அவனை அப்படியே வாரி வெளியில் எறிந்துவிட நினைத்தார். ஆனால், தாம் தூக்கி எறிகிற வரையில் அவன் சும்மா இருக்கவேண்டுமே என்னும் கவலையும் வதைத்தது. இவ்வாறு அவர் நெடுந்துரம் வரையில் கோபத்தைப் பாராட்டிக் கொண்டே வந்து கடைசியில் ஒருவகையான முடிவிற்கு வந்தார். அவன் அநேகமாய் அடுத்த ஊரில் இறங்கிவிடுவானென்றும், அதன் பிறகு தாம் இன்ப முறலாமென்றும் நினைத்து அமரிக்கையடைந்து அடுத்த ஊரின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். அவனிருக்கையில் அந்தப் பெண்ணோடு கொஞ்சிக் குலாவிப் பேச மனமற்றவரா யிருந்தார். அடுத்த ஸ்டேஷனும் வந்தது. ஆனால், அந்த மனிதன் இறங்கவில்லை. சாமாவையரது மனம் ஏங்கித் தவித்தது. அவன் எந்த ஊர் வரையில் வருவான் என்பதை அறிந்து கொள்ளவும் வழி இல்லை என்ன செய்வார் தமது மனதைப் புண்ணாக்கி வதைத்தவராய் நெருப்பின்மீது இருப்பவரைப் போலத் தத்தளித்திருந்தார். ஒருகால் அந்த மனிதன் அடுத்த ஊரில் இறங்குவானென்று எண்ணி, மிகவும் பாடுபட்டு அடுத்த ஊர்வரையில் பொருத்திருந்தார். அங்கும் அவன் இறங்க வில்லை. மிகுந்த விசனத்தில் ஆழ்ந்து குரங்கைப் பறிகொடுத்த ஆண்டியைப் போல ஏங்கி உட்கார்ந்து விட்டார். “அடுத்த ஊரில் இறங்குவான் அடுத்த ஊரில் இறங்குவான்” என்னும் நம்பிக்கையே உறுதியாகப் பிடித்துக் கொண்டு காத்திருந்தார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/69&oldid=1251906" இலிருந்து மீள்விக்கப்பட்டது