பக்கம்:மேனகா 2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

மேனகா

விம்மிதங்கொண்டு தாங்க மாட்டாமல் மெய்ம்மறந்து சிறிது மெளனமாயிருந்தபின், "ஈசுவரன், மலைபோல வந்த என் ஆபத்தை, மகா உத்தமியான உன்னுடைய நட்பைக் காட்டி, பனி போல விலக்கிவிட்டான் போலிருக்கிறது. அம்மா! முதலில் இந்த மஸ்லின்துணியை விலக்கி விட்டு; என்னுடைய புடவையை உடுத்திக் கொண்டால், எனது கவலையில் முக்காற் பங்கு தீரும். இந்தத் துணி துணியாகவே எனக்குத் தோன்றவில்லை. நான் ஆடையின்றி வெற்றுடம் போடிருப்பதாகத் தோன்றுகிறது" என்று நயந்து கூறினாள்.

நூர்:- “மேனகா! கவலைப்படாதே; இங்கே புருஷர் எவரும் வரமாட்டார்கள். கீழே விழுந்த உன்னை வேறு அறைக்குக் கொணர்ந்த உடன் டாக்டர் துரைஸானியை வரவழைத்தோம். அவள் வந்து நாடியைப் பார்த்தவுடன் முதலில் உனது புடவை, நகைகள் முதலியவற்றை விலக்கிவிட்டு இந்த மஸ்லின் துணியை அணிவிக்கச் சொன்னாள். அப்படிச் செய்யாவிடில், தடைபட்டு நின்றுபோன இரத்த ஒட்டம் திரும்பா தென்று கூறினாள். இன்றைக்கு முழுவதும் இதே உடையில் இருக்கவேண்டுமென்று சொல்லி யிருக்கிறாள்” என்று நயமாகக் கூறினாள். ஆனால், நூர்ஜஹான் மேனகாவுக்கு மஸ்லினை யுடுத்தி மருந்துகளை உபயோகித்து ஸோபாவில் படுக்க வைத்து, துரைஸானியையும், தனது சகோதரியையும் அவளண்டையிலிருக்கச் செய்து, தான் மேனகாவின் உடைகளையணிந்து, தனது கணவனது அந்தரங்கமான சயன அறைக்குப் போன விஷயத்தை அவளிடம் அப்போது கூறுதல் தகாதென நினைத்து அதை மறைத்து வைத்தாள். தனது கணவனுடன்தான் சச்சரவு செய்து, அவனால் துரத்தப்பட்டு ஓடி வந்தவுடன் மேனகாவை மோட்டாரில் வைத்து மூவருமாக மைலாப்பூருக்குக் கொணர்ந்ததையும், அந்நேரம் முதல் துரைஸானி பங்களாவிலேயே தம்முடன் கூடவிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/8&oldid=1251470" இலிருந்து மீள்விக்கப்பட்டது