பக்கம்:மேனகா 2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

79

உரோமம் சிலிர்த்தது; வந்தாள் வந்தாள் அருகில் நெருங்கி வந்து விட்டாள். அவளது கையில் விளக்கில்லை. கமலம் இருளில் வந்து தனது இடக்கரத்தால் ஐயரது கன்னத்தைத் தடவினாள். வலக்கரத்தில் பால் இருந்தது. வந்தவள் அவள்தானோ வென்பதை உணர நினைத்த ஐயரும் தமது கையை நீட்டினார். கமலம், “பால் கொட்டிப்போகும்; விஷமம் ஒன்றும் செய்ய வேண்டாம். வாயைத் திறவுங்கள்; நான் பாத்திரத்தை வாயில் வைக்கிறேன். அப்படியே பாலை குடித்துவிடுங்கள்” என்றாள். இடக்கரத்தால் அவரது சிரத்தை மேல்நோக்கித் திருப்பி சிறிதளவு பாலை வாயில் விடுத்து, “பால் வாயில் விழுகிறதா?” என்றாள். ஐயர் “விழுகிறது” என்றார். “நன்றாக திறவுங்கள்” என்றாள் கமலம். அவர் அப்படியே செய்தார். அப்போது அவளது கைகளினிடையில் இன்னொருவரது கை நுழைந்தது. கமலம் மெல்ல ஒரு புறமாக நகர்ந்தாள். ஐயரின் வாயில் பாலுக்கு பதில் ஒரு துணி பந்து (Ball) நுழைக்கப்பட்டது. அவர் உடனே திடுக்கிட்டுக் கூச்சலிட முயன்றார். அதற்குள் துணிப்பந்து வலுவாக வாய்க்குள் நுழைந்துகொண்ட தாகையால் சத்தம் வெளிப்படவில்லை. கமலம் அப்பால் போய்விட்டாள். உடனே ஏழெட்டு முரட்டுக் கைகள் ஐயருடைய கால்களையும் கைகளையும் இறுக்கப்பிடித்துக் கயிற்றினால் கட்டிவிட்டன. இரும்புப் பொறியில் அகப்பட்ட எலியைப்போல ஐயரது தேகம் நடுங்குகிறது. மூச்சு விட மாட்டாமல் ஐயர் தத்தளித்து பிரம்மாநந்த சுகமதுபவிக்கிறார். அப்போது ஒருவன் விளக்குடன் உள்ளே நுழைந்தான். என்ன விந்தை கமலம் காணப்படவில்லை. பனமரங்களைப்போலக் கருத்துப் பெருத்த தேகங்களைக் கொண்ட நான்கு மனிதர் தனக்கருகில் நின்றுகொண்டிருந்ததைக் காண, ஐயருக்குக் குலை நடுக்க மெடுத்தது. அப்போது சிறிதும் அசையமாட்டாமல் மூட்டையைப் போலத் தரையிற் கிடந்தார். அவர் மீதிருந்த ஆடையாபரணங்கள் யாவும் விலக்கப்பட்டன. அவரது கோவணத்தை மாத்திரம் திருடர்கள் மிகுதியாக விடுத்தார்கள். இருவர் ஒரு பெருத்த கோணிப்பையை விரித்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/80&oldid=1251923" இலிருந்து மீள்விக்கப்பட்டது