பக்கம்:மேனகா 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

மேனகா

அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்புவது போதுமென்பது தாந்தோனி ராயரின் கொள்ளை. அந்தத் தண்டனை போதாதென்பது இன்ஸ்பெக்டரின் எண்ணம். சாம்பசிவத்தின் வீட்டிலிருந்த பொருளை யெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விடவும், அவரையும் அவரது வீட்டிலுள்ளதாய் மனைவி முதலியோரையும் நன்றாக அடித்து, கால்களையும் கைகளையும் ஒடித்துவிடவும் தக்க ஆட்களைத் தயாரித்து அன்றிரவு அவர்கள் அந்தக் காரியத்தை முடிக்க வேண்டுமென்று உறுதி செய்து கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர். தெற்குச் சீமையின் பிரபலக் கள்ளர்களான சங்கிலி, கட்டாரி என்ற கொள்ளைக்காரர்களே அதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். அவர்களது பெயரைக் கேட்ட மாத்திரத்தில் ஜனங்கள் உளறி யடித்துக்கொண்டு ஒளிந்துபோவார்கள். உடனே ஜுரமும், சீதபேதியும் உண்டாய்விடும். அவ்விருவரும் அவ்வளவு மகா கொடிய பாதகர்கள். அவர்கள் வீட்டிற்குள்ளிருக்கும் மாடுகளை யெல்லாம் மூட்டையாகக் கட்டி கூரையின் வழியாகவே ஏற்றி வெளிப்படுத்திவிடக்கூடிய அவ்வளவு திறமை வாய்ந்த அரக்கர்கள். சமயம் நேர்ந்தால் தமது தாய்களையும், பிள்ளைகளையும், மனைவிமாரையும் ஆடுகளைப்போல வெட்டி பலியிடக் கூடியவர்கள். அவர்களிடம் தாம் செய்திருந்த ஒப்பந்தத்தை பிள்ளையவர்கள் ராயரிடம் கூற, அவர் மிகவும் சந்தோஷமடைந்து அதை ஆமோதித்தார். ஆனால், அந்தப் பெருத்த மண்டகப்படியில் சாம்பசிவத்திற்கு நிவேதன மில்லாமல் போகிறதே என்பது மாத்திரம் அவரது மனதிற்குக் குறையாக இருந்தது. என்றாலும், ராயரும் இன்ஸ்பெக்டரும் பெருமகிழ்வடைந்து அன்றிரவு இன்பக் கனவு கண்டு நன்றாக துயின்றனர்.

அன்று விடியற்காலம் முன்று மணிக்கே தாந்தோனி ராயர் எழுந்து தமது குதிரை வண்டியில் ஏறிக்கொண்டு பத்து மைல் தூரத்திற்கப்பாலுள்ள சாலியமங்கலம் என்ற ஊருக்கு சர்க்கியூட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/99&oldid=1251976" இலிருந்து மீள்விக்கப்பட்டது