பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22

மைக்கேல் காலின்ஸ்


விட்டது. ஆனால், குமஸ்தா வேலைக்கு லாயக்கற்றவன் ஒருவன் இருப்பானாகில், அவன் மைக்கேல் காலின்ஸ்தான். பழங்காகிதத்தில் மைகொட்டிப் பிழைப்பது அவனுக்குப் பிடிக்காது. அவனுடைய அபார சக்திக்கு அது ஏற்றதன்று. ஆயினும்,தொழில் ஒன்று வேண்டுமே என்ற கவலையினால், அதைப் பற்றிக்கொண்டிருந்தான்.

வேலைநேரம் தவிர மற்ற நேரங்களில் அவன் தாய் நாட்டின் சேவையில் ஈடுபட்டு வந்தான். அக்காலத்தில் அயர்லாந்துக்கு மிக அவசியமாயிருந்த விஷயங்கள் இரண்டு. ஒன்று அதன் பாஷையாகிய கெயிலிக் மொழி வளர்ச்சி; மற்றது அதன் வாலிபரின் உடல் வளர்ச்சி. மொழி வளர்ச்சியே மற்றைக் கலை வளர்ச்சிக்கு அடிப்படை. ஒரு நாட்டார் அந்நிய பாஷையிலே சிந்திக்கவும், பேசவும், எழுதவும் செய்வது இயற்கைக்கு மாறுபாடு. ஒரு நாட்டு இளைஞர் தோல் சுருங்கி, நரம்பு தளர்ந்து, கண்கள் குழிவிழுந்து கிடப்பாரானால், அவர்களுடைய உடல்களினுள்ளே வயிரமுடைய நெஞ்சத்தைக் காண்பது அரிது. ஆதலால், காலின்ஸ் மொழி வளர்ச்சியிலும், இளைஞர் உடல் வளர்ச்சியிலும் சிரத்தை கொண்டான். கெயிலிக் பாஷை சங்கத்திலும் கெயிலிக் தேகப்பயிற்சிச் சங்கத்திலும் சேர்ந்து உழைத்துவந்தான்.

தபால் காரியாலயத்திலுள்ள வேறு பல ஐரிஷ் வாலிபர்கள் அவனுக்கு நண்பரானார்கள். அவர்களுடன் சேர்ந்து அவன் தாய்மொழியைக் கற்றுவந்தான். அயர்லாந்தில் பிறந்த அவன், சொந்த நாட்டில் பிற மொழியைப் பயின்று, வெளி நாட்டில் சொந்த மொழியைப் பயிலவேண்டியிருந்தது. எதையும் செய்து, எவ்வகையாலும் தாய்மொழியை மடியவிடாது வளரச் செய்ய