பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமைப் பருவம்

21


கதை சொல்லுவதுமாகிப் பொழுது போக்குவது வழக்கம்.

சிட்டுக் குருவியைப்போல் எங்கும் பறந்து திரிந்து வாழும் வாழ்வு குழந்தைப் பருவத்திலேதான் அமையும். காலின்ஸ் அப்பருவத்தைத் தாண்டி மேலெழுந்து வந்ததைக் கண்ட அவன் அன்னை, அவனுடைய பிற்கால வாழ்வைப்பற்றிச் சிந்திக்கலானாள். அவனுடைய உற்சாகமும் அடங்காக் குணமும் அவனே அற்ப வேலைகளுக்கு லாயக்கில்லாமற் செய்துவிட்டன. ஆயினும், அன்னைக்கு நாளுக்கு நாள் பலவீனம் அதிகரித்து வந்ததால், தன் கண்ணுள்ளபோதே கடைசிக் குழந்தையை ஒரு பதவியில் வைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மிகுந்தது. ஆங்கிலத் தபால் இலாகாவிலே அவனைச் சேர்த்துவிடவேண்டும் என்று முடிவுசெய்தாள். அதன்படி காலின்ஸ் தபால் காரியாலயக் குமாஸ்தா வேலைக்குரிய பரீட்சைக்குப் படிப்பதற்காக குளோனகில்டி நகருக்குச் சென்றான். அப்பொழுது அவனுக்கு வயது பதின் மூன்றரை. அங்கே அவனுடைய மூத்த சகோதரியின் வீட்டில் தங்கிப் படித்துவந்து, பரீட்சையிலும் தேறினான். பின், தன்னுடைய பதினேந்தாவது வயதில் லண்டன் தபால் காரியாலயத்தில் வேலை பார்ப்பதற்காகப் புறப்பட்டான். அங்கே அவனுடைய மற்றொரு சகோதரியான ஜோஹன்னா அதே காரியாலயத்தில் வேலை பார்த்து வந்தாள்.

மேற்கு கென்ஸிங்டன் தபால் காரியாலயத்திலுள்ள ஸேவிங்ஸ் பாங்கில் அவனுக்கு ஒரு குமாஸ்தா வேலை கிடைத்தது. கென்ஸிங்டன் லண்டன் நகரின் ஒரு பாகம். அங்கு சென்றபின் அவன் விரைவாக உருவத்தில் வளர்ந்து வந்ததால், சிறுவன் என்ற பெயர் மாறி