பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20

மைக்கேல் காலின்ஸ்


அரசியல் உண்மைகளைத் தெரிந்துகொண்டான். சுக்கு, மிளகு வாங்குவதுபோல் தேசத்தின் சுதந்திரத்தை வாங்க முடியாதென்று அறிந்தான். வெறும் கிளர்ச்சிகள் அவன் உள்ளத்தைக் கவரவில்லை. ஆர்தர் கிரிபித் என்ற தேசாபிமானச் செல்வர் நடத்திவந்த 'ஐக்கிய ஐரிஷ்காரன்' என்று பொருள்படும் 'யுனைட்டெட் ஐரிஷ்மென்' என்ற வார சஞ்சிகை வீரத் தொனியோடு விளங்கியதால், அவன் அதை மட்டும் இடைவிடாது படித்து வந்தான். நாளுக்கு நாள் பாதிரிமார்களிடத்தில் அவனுக்கு அளவற்ற வெறுப்பு ஏற்பட்டு வளர்ந்து வந்தது. இதற்கு ஒரு காரணம் அவனுடைய விசேஷப் படிப்பு. ஆனால், இவ்வெறுப்பு வெகுநாள் நிலைக்கவில்லை.

திண்ணமான உடலும், ஊக்கமும் உற்சாகமும் பொருந்திய மனதும் காலின்ஸ் பெற்றிருந்ததால், இளமையில் தோன்றும் பல நோய்கள் அவனைப் பீடிக்கவில்லை. மல்யுத்தம், ஓட்டம், தாவுதல், குதிரையேற்றம் முதலிய விளையாட்டுகள் பலவற்றிலும் அவன் கலந்துகொண்டு உடற்பயிற்சி பெற்றான் குதிரைகளிடத்தில் அவனுக்கு விசேஷப் பிரியமுண்டு. ஒரு சமயம் மூன்று வயதான பழக்கப்படாத குதிரை ஒன்றின்மேல் ஏறிக்கொண்டு, அது தானாகக் களைத்து நிற்கும்வரை சவாரி செய்திருக்கிறான். சாரத்தியம் செய்வதிலும் அவன் சமர்த்தன்.

இன்சொல்லும் சுமுகமும் படைத்திருந்ததால், பலர் அவனுக்கு நண்பர்களாயினர். இளைஞர், முதியோர், பெண்கள்—யாவருடைய கூட்டத்திலும் அவன் சஞ்சலப்படுவதில்லை. இயற்கையழகு செறிந்த நதிப்பக்கத்திலும் கடற்கரை ஓரத்திலும், அவன் தன் உடன்பிறந்தார், நண்பர்களுடன் ஓடுவதும், உலவுவதும், விளையாடுவதும்,