பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போர்க் கோலம்

29


அக்காலத்தில் அரசியல் உலகில் புகழ்பெற்றிருக்க ரெட்மண்டு என்னும் தலைவர் தம் சகாக்களுடன் தொண்டர் படையில் சேர்ந்து, அதை உள்ளிருந்தே உடைத்துவிட வேண்டும் என்று வேலை செய்துவந்தார். சிறிது காலத்திற்குப் பின்னால், அதிதீவிரவாதிகள் அவரை விட்டுப் பிரிந்து தனிப் படை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர்.

ரெட்மண்டு பிரிட்டிஷ் பார்லிமெண்டில் அங்கத்தினர். ஐரோப்பா யுத்த ஆரம்பத்தில் பார்லிமெண்டு. ஐரிஷ் சுயாட்சி மசோதா ஒன்றை நிறைவேற்றும்படி அவர் கட்டாயப்படுத்தி யிருக்கலாம். அந்த அரிய சக்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை. அவர், சுதந்திரம் வேண்டுவதற்குப் பதிலாக, ஐரோப்பா, யுத்தத்தில் அயர்லாந்து தங்கு தடையின்றி இங்கிலாந்தை ஆதரிப்பதாக காமன்ஸ் சபையில் உறுதி கூறினார். ஜனங்களில் பெரும்பாலோர் அவரையே தலைவர் என்று நம்பி யிருந்ததால், நாடெங்கும் ஆங்கிலேயருக்கு அநுகூலமான உற்சாகம் காணப்பட்டது. ஆனால் முக்கியமான ஒரு சிறுபான்மைக் கூட்டத்தார் மட்டும். மிக்க உறுதியுடன் விலகி நின்றனர். அவர்களுடைய கொள்கையை ஆர்தர் கிரிபித்தின் 'ஸின்பீன்' பத்திரிகை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் பிரகடனப்படுத்தியது. அந்தப் பிரகடனம் வருமாறு :

'அயர்லாந்து ஜெர்மனியோடு யுத்தஞ் செய்யவில்லை. அதற்கு ஐரோப்பா கண்டத்திலுள்ள எந்த வல்லரசினிடத்திலும் சண்டை இல்லை. இங்கிலாந்து ஜெர்மனியோடு போராடுகிறது. திரு. ரெட்மண்டு அயர்லாந்தைப் பாதுகாப்பதற்குத் தேசீயத் தொண்டர்களின் ஊழியத்தைக் கொடுக்க இசைந்திருக்கிறார். அயர்லாந்து