பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மைக்கேல் காலின்ஸ்


நம்பிக்கை கொண்ட 'ஐரிஷ் கட்சியார்' பற்பலவிதமாக விலைக்கு வாங்கப்பட்டனர். அதுமட்டுமன்று. அயர்லாந்துக்குள் ஆயுதங்களை இறக்குமதி செய்யக்கூடாது என்று தடை செய்யப்பட்டது. ஆனால், வட அயர்லாந்தில் அல்ஸ்டர் வாசிகள், ஸர் எட்வர்ட் கார்ஸன் என்பவரின் தலைமையின் கீழ், ஐரிஷ் சுயாட்சியை எதிர்ப்பதற்காக எல்லாவித ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு படையாகத் திரண்டு பயிற்சி பெறுவதற்கு அரசாங்கம் அனுமதித்து வந்தது.

தொண்டர் படை சேர்க்கும் விஷயமாக முதன் முதலில் டப்ளின் நகரிலுள்ள மாபெரும் மண்டபம் ஒன்றில் பெருங்கூட்டம் கூட்டப்பட்டது. பல்லாயிரம் வாலிபர்கள் தொண்டர் படையில் சேர முன்வந்தனர். தொண்டர் படையின் நோக்கங்களாவன :

i. அயர்லாந்திலுள்ள சகல மகாஜனங்களுக்கும் பொதுவான உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெற்றுப் பாதுகாத்தல்.

ii. மேற்கண்ட காரியத்திற்காக ஐரிஷ் தொண்டர் படை ஒன்றைப் பயிற்சி செய்து, ஒழுங்குபடுத்தி, ஆயுதம் கொடுத்து நிறுவுதல்.

iii. இந்தக் காரியத்திற்காக வெவ்வேறு கொள்கையுடையவர்களும், கட்சியினரும், வகுப்பினருமான சகல ஐரிஷ்காரர்களையும் ஐக்கியப்படுத்தல்.

இந்த நோக்கங்களை ஆதரித்து நாடெங்கும் தொண்டர் படைகள் தோன்றின. மாஜி யுத்த வீரர்கள் தொண்டர்களுக்குப் பயிற்சி கொடுத்து வந்தார்கள். ஸின்பீன் சங்கத்திலிருந்தும் கெயிலிக் சங்கத்திலிருந்தும் பலர் தொண்டர்களாய்ப் பதிவு செய்துகொண்டார்கள்