பக்கம்:மொழியின் வழியே.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 16 - மொழியின் வழியே!

'நாலிரண்டாகும் பாலும் என்று சிறப்பித்ததனால் எட்டாதலே யன்றி ஒன்பதுமாகும் என்னும் பிறர் மதத்தையும் ஆசிரியர் இங்கே தொனிப்பிக்கிறார். பேராசிரியரும் இவ்வாறே கூறினர்.

இனிப் பழந்தமிழ் நாடக நூலாசிரியராகிய செயிற்றி யனார் என்பார், சுவையுணர்வையும் சுவைப்பொருளையும் ஒன்றாக்கிச் சுவை, குறிப்பு, சத்துவமென மூவகைப் பாகுபாடு செய்து எண்சுவையோடு பெருக்கி இருபத்து நான்கு பிரிவாகக் கொண்டார். கொண்டாரேனும் எட்டினுள் அடங்குமென இறுதியில் உடன்பட்டார். வேறு நாடக நூலாசிரியர் சிலர் சமனிலை என்னும் ஒன்பதாஞ் சுவையையும் கூறி, இம் மூன்று பிரிவுகளோடும் உறழ்ந்து இருபத்தேழு எனக் கூறுவர். இனி, இவ்வொன்பது சுவைகளின் அமைதியும் நாடக நூலிற்கு இன்றியமையாததாகலின் நாடக நூலாசிரியராகிய செயிற்றியனாரும் இருபத்தேழு சுவையே வேண்டினார் என்று கூறினாலும் தவறில்லை. இதுவரை சுவையின் முறை துறைகளை ஒருவாறு விளக்கி வரைந்தோம். இனிச் சுவையின் இயல்புகளையும் அவைகளை அம்முறையே வைத்தமைக்கு உரிய காரணங்களையும் ஆராய்ச்சிச் சான்றுகளோடு விளக்க முற்படுவோம்.

நகை எனப்படுவது சிரிப்பு. அது முறுவல், புன்னகை, பெருநகை என நிகழ்கின்ற முறைமையால் மூவகைப் படும். அழுகை எனப்படுவது அவலச்சுவை. அவலமெனச் சுவையின் பெயர் கூறாமல் அழுகை என் அச்சுவைக்குரிய மெய்ப்பாட்டாற் பெயர் கூறினார் ஆசிரியர். அவலச்சுவை பிறர் அவலங்கண்ட வழியும் தானேயவலமுற்ற வழியும் ஆகிய இரு நிலைமைக் கண்ணும் தோன்றும். இவற்றுள் பிறர் அவலங் கண்ட வழித் தோன்றும் சுவையைக் கருணை என வேறு ஒரு சுவையாக வழங்குவர் வடமொழிவாணர். தொல்காப்பியர் அவலச் சுவையினுள் அதனை அடக்கி