பக்கம்:மொழியின் வழியே.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மொழியின் வழியே!

விளங்கிய அந்த உயர்ந்ததரத்து எழுதுகோலை என் உயிரினும் சிறந்ததாக மதித்து வந்தேன். ஆனால், இப்போதோ அது உடைந்து ஒழுகிய மைக்கறையின் நடுவே சில்லுச் சில்லாகக் கிடந்தது. போர்க் களத்தில் குருதி வெள்ளத்தினிடையே கை கால்கள் வெட்டுண்டு இறந்து கிடக்கும் காதலனை அவனுடைய ஆருயிர்க் காதலி எத்தகைய சோக உணர்வோடு காண்பாளோ அத்தகையதோர் அவலம் என் நெஞ்சத்தை அழுத்திப் பிழிந்தது. நான் திருக்குறள் புத்தகத்தை அசைத்த போது அதன் ஒரு முனை பேனாவை உருட்டியிருக்க வேண்டும்! எப்படி உருண்டு விழுந்தாலென்ன? என்னுடைய உள்ளத்தில் அழியாத மகிழ்ச்சிக்கும் ஆர்வத்திற்கும் காரணமாக இருந்த அந்த அரும்பொருள் அழிந்து போய்விட்டது! இனி அதை மீண்டும் முழு உருவுடன் காண இயலாது என்பது உறுதி. கொற்சேரி ஊதுலையைப் போல வெய்துயிர்த்து உருகித் தவித்தது என் உள்ளம். அளவு மீறிய பற்றுச் செலுத்திப் பேணிய அந்த எழுதுகோலை இழந்த தவிப்பில் நான் சிந்தித்துக் கொண்டிருந்த செய்தியே எனக்கு மறந்து போய்விட்டது. டால்ஸ்டாயை மறந்தேன், காந்தியடிகளை மறந்தேன், திருவள்ளுவரையும் மறந்து விட்டேன். 'வேண்டாமை பற்றிய அவர்கள் கருத்துக்களும் என் உள்ள மலரிலிருந்து உதிரும் இதழ்கள்போல வாடி உதிர்ந்து விட்டன.

மேசைமேல் கிடந்த மூவரின் நூல்களும், கருவுயிர்த்த சற்றைக்கெல்லாம் தாயிழந்த பார்ப்புக்களைப் போலப் பார்ப்போரற்றுக் கிடந்தன. நான் வேண்டிப் பேணிக் கொண்டிருந்த ஒரு மதிப்பிற்குரிய பொருளின் எதிர்பாராத சிதைவு என் உள்ளத்தைச் சிதைத்துக்கொண்டிருக்கும்போது வேண்டாமையைப் பற்றிய கருத்துக்களும் நூலறிவுரைகளும் அங்கே எப்படித் தங்கமுடியும்? இந்நிலையில் ஒரு வாரம் கழிந்தது. - அரிமாவின் குகையிலே நாய்க் குருளையைக் கொண்டு போய்க் குடியேற்றியது போலப் பழைய எழுதுகோலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/64&oldid=621409" இலிருந்து மீள்விக்கப்பட்டது