பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிணறுகள் - செய்குளம் - செங்கற்கள்

87


புழை ஒன்று அமைந்துள்ளது. அஃது ஒரு மனிதன் தாராளமாக நுழைந்து செல்லக்கூடிய அளவு அகன்றதாக இருக்கின்றது. அது, வேண்டும் போது தண்ணிரை வடியாமல் தடுத்து வைப்பதற்காகவும், வேண்டாதபோது தண்ணீரை வெளிவிடுதற்காகவும் அமைந்துள்ள மதகைப்போலச் சிறந்த வேலைப்பாடுடையதாகக் காணப்படுகிறது. சுருங்கக் கூறின், இச்செய்குளத்தின் வேலைப்பாடு ஒன்றே ஆராய்ச்சியாளரைப் பெரிதும் வியப்புறச் செய்ததென்னல் மிகையாகாது. இதன் அருகில் உள்ள பிற மண் மேடுகளும் தோண்டப்பட்ட பின்னரே இதன் அருமை பெருமைகள் மேலும் விளக்கமாகும்.

செங்கற்கள்

வீடுகள், கிணறுகள், குளங்கள், கழிநீர்ப்பாதைகள் இன்ன பிறவற்றுக்கும் மொஹெஞ்சொ-தரோவில் பயன்பட்ட செங்கற்களைப்பற்றிய சில விவரங்களை அறிதல் இங்கு அவசியமாகும். சிந்துப் பிரதேச மக்கள் சுமேரியாவிலிருந்து நிலக்கீலைக் கொண்டுவந்தவாறே செங்கல்செய்யும் முறையினையும் பிறரிடம் கற்றனரா? அன்றி இயல்பாகத் தாமே உணர்ந்தனரா? என்னும் வினாக்கட்கு விடை காணல் கடமையாகும்.

பண்டை நாடுகள்

எகிப்து, சுமேரியா முதலிய பண்டைப் புகழ் படைத்த நாடுகளில் சூளையிடப்பட்ட செங்கற்களைக் கட்டிடங்கட்குப் பயன்படுத்தும் வழக்கமே அப்பண்டை நாட்களில் எழுந்திலது. உரோம அரசு ஏற்பட்ட பின்னரே செங்கற்களைப் பயன்படுத்தும் முறையை அம் மேற்குப்புற நாடுகள் அறியலாயின. எகிப்தில் கல்லைப் போன்ற ஒருவகைக் கடினமான பொருள் மிகுதியாகக் கிடைத்தது. அதனால், அம்மக்கள் செங்கற்களைச் செய்யவேண்டிய அவசியம் எழவில்லை. சுமேரியர்க்கும் அங்ஙனமே. எனவே, சிந்துப் பிரதேச மக்கள் செங்கற்களைச் செய்யும் முறையைப் பிற நாட்டாரிடம் கற்றிலர்: