பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

மொஹெஞ்சொ - தரோ


இரண்டு நிறங்களே பெரிதும் பயன்பட்டு இருப்பினும் பசுமை, வெண்மை, சாம்பல் நிறங்களும் மிகுதியாகவே பயன்பட்டுள்ளன. மஞ்சள் நிறம் அருமையாகவே பயன்பட்டுள்ளது. சில பாண்டங்கள் மீது வெளுத்த மஞ்சள் பட்டைமீது கறுப்புப்பட்டை அடிக்கப்பட்டிருக்கிறது. சில பாண்டங்கள் மீது பழுப்பு நிறம் தீட்டப்பட்டு அதன்மீது கறுப்புப்பட்டை அடிக்கப்பட்டுள்ளது.

இப்பன்னிற மட்பாண்டங்கள் மொஹெஞ்சொ-தரோவுக்குத் தெற்கே 128 செ.மீ. தொலைவில் உள்ள அம்ரீயிலும் கிடைத்தன. அவற்றுள் சிவப்பும் கறுப்பும் மிகுதியாகப் பூசப்பட்டவையே பலவாகும். மொஹெஞ்சொ-தரோவிற்கு வடமேற்கில் 176 செ. மீ. தொலைவில் உள்ள ‘நால்’ என்னும் பழம்பதியிற் கிடைத்த மட்பாண்டங்கள் பல பச்சை நிறம் பூசப்பட்டவை ஆகும். இங்ஙனம் மட்பாண்டங்கட்கு நிறம் பூசும் வழக்கம் அப்பண்டைக்காலம் முதல் இன்று வரை இந்நாட்டில் இருந்து வருதல் கவனிக்கத் தக்கது. இப்பழக்கம் இன்றும் மொஹெஞ்சொ-தரோவுக்கு அருகில் உள்ள சில கிராமங்களிலும் இருந்து வருகிறது.

நிறங்களைப் பூசுவானேன்?

மட்கலங்களில் கட்புலனுக்குத் தெரியாத பல சிறிய துளைகள் இருத்தல் கூடும். நிறங்கள் உள்ளும் புறமும் பூசப்படுவதால் அத்துளைகள் அடைபடும்; அழகும் கொடுக்கும். இவ்விரு காரணங்களை நன்கு உணர்ந்த அப்பண்டை நகரத்து வேட்கோவர் தாம் செய்த மட்பாண்டங்கட்கு நிறம் பூசினர் என்று டாக்டர் மக்கே கருதுகின்றார். இங்ஙனமே தண்ணீர் சேமித்துவைக்கப் பயன்பட்ட பெரிய தாழிகள் நிலக்கீல் பூசப்பட்டிருந்தனவாம்.

ஒவியம் கொண்ட மட்பாண்டங்கள்

மொஹெஞ்சொ-தரோவில் ஒவியம் தீட்டப்பட்ட மட்பாண்டங்கள் பல கிடைத்துள்ளன. சிவப்பு நிறம் பூசப்பட்ட பாண்டங்கள் மீது கறுப்பு நிறங்கொண்டு தீட்டப்பட்ட