பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும்

93


புகை வெளிச்சென்றது. சூளையிடப்பட்ட பொருள்களைக் காண்கையில், காளவாய்கள் முதற்றரமான முறையில் இருந்திருத்தல் வேண்டும் என்பதும், வேட்கோவர் பண்பட்ட வினையாளர் என்பதும் எளிதிற் புலனாகின்றன. மெருகிடும் கருவிகள்

வேட்கோவர் மட்பாண்டங்களை மெருகிட என்றே ஒருவகைக் கருவியைப் பயன்படுத்தி வந்தனர் என்பது தெரிகிறது. அக்கருவி எலும்பினால் ஆனது. அது 38 செ. மீ நீளமும் 4 செ. மீ. அகலமும் 10 செ.மீ. கனமும் உடையது. அக்கருவி ஒன்று ஆராய்ச்சியாளருக்குக் கிடைத்தது. அதைப்போலவே சிறிய அளவுள்ள கருவிகள் சிலவும் கிடைத்தன. இவை அல்லாமல் சிறிய எலும்புத் துண்டுகளும் கூழாங்கற்களும் மட்பாண்டங்களை மெருகிடுவதற்காகப் பயன்பட்டன. ஹரப்பாவில் 42 செ. மீ. நீளமுள்ள மெருகிடும் கருவி ஒன்று கிடைத்தது. இக்கருவிகள் தரையையும் சுவர்களையும் வழவழப்பாக்கவும் பயன்பட்டன. வேட்கோவர் இல்லங்களில் இம்மெருகிடும் பணியைப் பெண்பாலாரே செய்திருத்தல் கூடியதே என்று அறிஞர் அறைகின்றனர்: சூளையிடப்பட்ட பாண்டங்கள்மீது அழகிய நிறங்களைப் பூசியவரும் ஒவியங்கள் தீட்டியவரும் மகளிராகவே இருத்தலும் கூடியதே. என்னை? இன்றும் மொஹெஞ்செர்தரோவைச் சுற்றியுள்ள இராமங்களில் இவ்வேலைகளைச் செய்து வருபவர் பெண்மணிகளே ஆதலின் என்க.[1]

பலநிறப் பண்டங்கள்

மொஹெஞ்சொ-தரோ மக்கள் பயன்படுத்திய மட்கலன்களுள் ஒரு சில தவிரப் பெரும்பாலான ஏதேனும் ஒருவகை நிறம் தீட்டப் பட்டனவாகவே இருக்கின்றன. அவற்றுட்பல, செந்நிறம்பூசப்பட்டுக் கறுப்புப் பட்டைகள் அடிக்கப்பட்டுள்ளன. சிவப்பு கருமை என்னும்


  1. Drr Mackay’s ‘The Indus Civilization’, p.142