பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

மொஹெஞ்சொ - தரோ


உறுதியாக இருக்கும் என்பதை அவ்வினையாளர் நன்கு அறிந்திருந்தமை வியப்புக்கு உரியதே ஆகும். இப்பலவகைப் பொருள்களை ஆராய்ந்த அறிஞர்கள், ‘இம்மட் பாண்டங்களே உலகில் பழைமையும் உறுதியும் அழகும் பொருந்தியவை’ என்று கூறி வியக்கின்றனர்.

வேட்கோவர் உருளைகள்

மட்பாண்டங்கள் அனைத்தும் வேட்கோவர் உருளையைக் கொண்டே செய்யப்பட்டவை ஆகும். வேட்கோவர், மட்பாண்டங்களை உருளைகள் மூலம் உருவாக்கிய பின்னர், அவற்றின்மீது செங்காவி நிறம் பூசிக் காயவைத்து, பின்னர் அவற்றை வழவழப்பாக்கி, இறுதியிற் சூளையிட்டனர். இவ்வேலைகட்குப் பின்னரே அம்மட்பாண்டங்கள் கண்கவர் வனப்புப் பெற்றுள்ளன. இங்ஙனம் உருளைகள் துணைக்கொண்டு செய்யப்படாமல் வேட்கோவர் தம் கைகளைக் கொண்டே செய்யப்பட்ட மட்பாண்டங்களும் சில கிடைத்துள்ளன. அவை மகளிரால் செய்யப்பட்டு, வீட்டிற்குள்ளேயே சூளையிடப்பட்டனவாக இருத்தல்கூடும் என்று டாக்டர் மக்கே போன்ற ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

காளவாய்

வேட்கோவர் பயன்படுத்திய உருளைகளில் ஒன்றேனும் இன்று கிடைத்திலது. ஆயினும், அவர்கள் பயன்படுத்தின காளவாய்கள் சில சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அவை வட்டவடிவில் 180 அல்லது 210 செ. மீ. சுற்றளவு உடையனவாக அமைந்துள்ளன. இவற்றின் அடிப்பாகத்தில். நிறையத் துளைகள் உள்ளன. சூளையிடப்பட வேண்டிய பொருள்கள் காளவாயின் மீதுள்ள சமமான இடத்தில் வைக்கப்பட்டன; அடியில் தீமூட்டப்பட்டது. தீ துளைகள் மூலம் மேற்சென்று, மேலே வைக்கப்பட்ட பொருள்களை வேகச் செய்தது, மேற்புறத்தில் குழை ஒன்று இருந்தது, அதன் வழியாகவே